வல்ல அல்லாஹ் நம் எல்லோருக்கும் நிறைவான நற்பாக்கியங்களையும் நலமான வாழ்க்கையையும் இம்மையிலும் மறுமையிலும் தந்தருள்வானாக!
நம்மில் இளைஞராக இருக்கின்ற ஒவ்வொருவரும் முதுமையை சந்தித்தே ஆக வேண்டும். சிறியவர்களாக இருப்பவர்கள் பெரியவர்களாக ஆவார்கள். ஒவ்வொரு முதியவரும் இளமையைக் கடந்து வந்தவர் தாம், இந்த மாற்றங்கள் அல்லாஹ்வால் ஏற்படுத்தப்படக்கூடியவை வாழ்க்கையின் இந்த மாற்றத்தைத் திரும்பி பார்க்கின்ற ஒவ்வொருவரும் எத்தனையோ விதமான படிப்பினைகளைப் பெறுகின்றனர்.
இளமைப் பருவத்தில் உள்ள துடிப்பும், உணர்வுகளும் வயோதிகப் பருவத்தில் காணப்படுவதில்லை, எனவே இளமைப்பருவத்திற்கு மிகப்பெரிய முக்கியத்துவத்தை இஸ்லாம் கொடுத்துள்ளது. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ”உமக்கு முதுமை வருவதற்கு முன்னால் உன்னுடைய வாலிபத்தை பயன்படுத்திக்கொள்” மேலும் கூறினார்கள்: ”உன்னுடைய இளமையை எதில் செலவிட்டாய் என்று நீ மறுமையில் விசாரிக்கப்படுவாய்”. எனவே துடிப்புள்ள பருவத்திலுள்ள இளைஞர்கள் தனக்கு மூத்தவர்களையும் தன்னைவிட அறிவாற்றல் அனுபவத்தில் முதிர்ந்தவர்களையும், மதிக்கின்ற பண்புடையவர்களாக இருக்க வேண்டும். தள்ளாடுகின்ற பருவத்தை அடைந்துவிட்டவர்களைப் பார்த்து நகைப்பது, ஏளனம் செய்வது, மாபெரும் தவறு என்பதை இளைஞர்கள் புரிய வேண்டும். ”நாமும் ஒருநாளைக்கு இந்த நிலையை அடையத்தான் போகின்றோம் அந்த நேரத்தில் துடிப்புள்ள இளைஞர்கள் நம்மை மட்டம் தட்டி பேசினால் நம் நிலை எப்படி இருக்கும் என்பதை சிறிது யோசித்துப்பார்த்து செயல்பட வேண்டும்.
புத்தியுள்ள இளைஞர்கள் மூத்தவர்கள், முதியவர்களின் அனுபவங்களிலிருந்து பாடம் படிப்பார்கள். அவர்களை அன்போடு அணுகி கடந்த காலங்களில் அவர்கள் பாதை, அவர்கள் சந்தித்த அனுபவங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள முற்படுவார்கள். அதிலிருந்து பயனுள்ளதை எடுத்துக் கொள்வார்கள். அவர்களுக்கு கிடைக்காத அரிய கருத்துக்கள் தன்னிடம் இருந்தால் அவற்றை அவர்களின் கவனத்திற்கு மென்மையான முறையில் எடுத்துச் செல்ல முற்படுவார்கள். இப்படிப்பட்ட அணுகுமுறைகள் இளைஞர்களிடம் காணப்படுவது அவசியமாகும்.
உங்கள் நலன் நாடும்
S.கமாலுத்தீன் மதனி அல்-ஜன்னத் மாத இதழ் ஏப்ரல் 2012
அல்லாஹ்வின்அருளுக்குரியநபித்தோழர்கள்!அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களால் நேரடியாகப் பயிற்சி கொடுக்கப்பட்டு, வார்த்து எடுக்கப்பட்டவர்கள் தான் நபித்தோழர்கள், நபி(ஸல்) அவர்களின் வாயிலிருந்து திருக்குர்ஆன் வசனங்களை நேரில் ஓதக் கேட்டுப் பெற்றவர்கள். அல்லாஹ்வுடைய வேதமாகிய திருகுர்ஆன் உலக மக்கள் யாவருக்கும் பாதுகாப்பான முறையில் போய்ச் சேருவதற்கு அரும்பாடுபட்டவர்கள், நபி(ஸல்) அவர்களின் வழிமுறையை தங்கள் வாழ்க்கையில் முழுமையாகப் பின்பற்றியவர்கள் அத்தனை சிறப்பிற்கும் சொந்தக்காரர்கள் தான் நபித்தோழர்கள்.
அல்லாஹ்வுடைய பரிசுத்த வேதமாகிய குர்ஆன் பாதுகாக்கப்பட்டு உலகெங்கும் யாவருடைய கைகளிலும் காணப்படுகிறதென்றால் அதற்கு முக்கிய காரணமாகத் திகழ்ந்தவர்கள் தான் சத்திய நபித்தோழர்கள். அவர்கள் கொண்ட ஈமானிய உறுதிக்கு ஈடாக அவர்களுக்குப் பின்னால் யாரும் இருந்ததில்லை, அவர்களுடைய இறைநம்பிக்கையைப் போன்று யாரெல்லாம் நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களே நேர்வழிபெற்றவர்கள் என அல்லாஹ் பாராட்டிக் கூறியுள்ளான். அல்குர்ஆன் 2:137
அவர்கள் நீதிக்கும் நேர்மைக்கும் புகழ்பெற்றவர்கள் என வல்ல அல்லாஹ் பாராட்டுகின்றான். தனது நபியின் தோழமைக்கும், அவருக்கு துணையாக நிற்பதற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை விட நேர்மைக்குரியவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. அல்லாஹ் பாராட்டிப் புகழ்ந்து கூறுபவர்களை விட சிறப்பிற்குரியவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.
அல்லாஹ் கூறுகிறான்: ”முஹம்மது அல்லாஹ்வுடைய தூதராவார். அவருடன் இருப்பவர்கள் இறை நிராகரிப்பாளர்கள் மீது கண்டிப் பாகவும் தங்களுக்கிடையே இரக்கமுடையவர்களாகவும் இருப்பார்கள். குனிந்தும், நெற்றியை தரையில் வைத்தும் அல்லாஹ்வை வணங்கி, அவனுடைய அருளையும் அவனுடைய திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டக் கூடியவர்களாக அவர்களை நீர் காண்பீர், அவர்களுடைய அடையாளமாவது அவர்களுடைய நெற்றியில் சுஜுதின் காரணத்தினால் அடையாளம் ஏற்பட்டிருக்கும்” (அல்குர்ஆன் 48:29)
இறைத்தூதர்களுக்குப் பின்னால் படைப்புகளில் சிறந்தவர்களாக நபித்தோழர்கள் கருதப்படுகிறார்கள். காரணம் நன்மையான காரியங்களைச் செய்வதில் முந்திச் செல்லக் கூடியவர்களாக இருந்தார்கள். அந்த நன்மையான காரியங்களை அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு யாரெல்லாம் செயல்படுகிறார்களோ அவர்களை அல்லாஹ் ஏற்று திருப்திப்பட்டுக் கொள்கிறான்.
”(நபித்தோழர்களான) முஹாஜிர்களிலும், அன்சார்களிலும் முதலாவதாக இறைநம்பிக்கைக் கொள்வதில் முந்திக்கொண்டவர்களும், அவர்களை நற்செயலில் பின் பற்றியவர்களும் இவர்கள் எல்லோரையும் அல்லாஹ் திருப்திபட்டுக்கொண்டான். அவர்களும் அவனை பொருந்திக் கொண்டார்கள். மேலும் அவர்களுக்காக சுவனபதிகளை தயார்படுத்தியிருக்கின்றான். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அதில் என்றென்றும் நிரந்தரமாக தங்கியிருப்பார்கள், இதுவே மகத்தான வெற்றியாகும். அல்குர்ஆன் 9:100
சத்திய நபித்தோழர்களை மகத்தான வெற்றி பெற்றவர்கள் என்று வல்ல அல்லாஹ் புகழ்ந்து பாராட்டுகின்றான். அவர்களுடைய நற்செயல்களை முன்மாதிரியாகக் கொண்டு செயல்படக் கூடியவர்களையும் வெற்றியாளர்கள் என்றும், சொர்க்கத்திற்கு தகுதியுடையவர்கள் என்றும் பாராட்டிக் கூறுகின்றான்.
இப்படிப்பட்ட சத்திய சீலர்களை மட்டம் தட்டி இழித்துப் பேசக்கூடிய வனை விட கேவலமானவன் யாரும் இருக்க முடியாது. மறுமை நாளில் அல்லாஹ்வின் முன் இழிவானவர் களாகவே இவர்கள் கொண்டு வரப்படுவார்கள். உண்மையான இறை நம்பிக்கையாளன் நாம் நேர்வழிபெற்று உண்மையான மார்க்கத்தைப் பின்பற்றுவதற்கு காரணமாக இருந்தவர்களுக்காக அல்லாஹ்விடத்தில் பிரார்த்திப்பான். ”சத்திய நபித்தோழர்களுக்குப் பின்னால் வந்தவர்கள்” எங்கள் நாயனே! எங்களுக்கும் இறைநம்பிக்கை கொள்வதில் எங்களை முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக! மேலும் இறை நம்பிக்கை கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் வெறுப்பை ஆக்காதிருப்பாயாக! எங்கள் நாயனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன், கிருபை மிக்கவன் என்று பிரார்த்திப்பார்கள். அல்குர்ஆன் 59:10
இப்படிப்பட்ட நல்லோர்களின் வழியை எங்களுக்குக் காட்டுவாயாக! என்று தான் ஒவ்வொரு தொழுகையாளியும் தொழுகையில் நின்று கொண்டுபிரார்த்தித்து வருகின்றனர். எனவே நல்லோர்களான நபித்தோழர்களை மதிப்போம்.
அல்-ஜன்னத் மாத இதழ் ஏப்ரல் 2012 – தலையங்கம்
படித்து விட்டீர்களா? இம்மாத அல்-ஜன்னத் (April. 2012) இப்போது பரபரப்பான விற்பனையில், உங்கள் பிரதிக்கு முந்திக்கொள்ளுங்கள்…
நாம் வாழுகின்ற இந்த பூமி அல்லாஹ்வால் படைக்கப்பட்டது, அதிலுள்ள சர்வ பாக்கியங்களும் அவனால் உண்டாக்கப்பட்டவை. இவை அனைத்தையும் மனிதன் அனுபவிப்பதற்காகவே படைத்திருக்கின்றான்.
”உங்களுக்காகவே பூமியில் உள்ள அனைத்தையும் படைத்தான்” அல்குர்ஆன் 2:29
பூமியில் உள்ள அனைத்தையும் வசப்படுத்திக் கொடுத்திருப்பதாவும் அல்லாஹ் கூறுகிறான். ”அல்லாஹ் அவன்தான் வானங்களையும் பூமியையும் படைத்தான். வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி அதன்மூலம் உங்களுக்குத் தேவையான பழவகைகளை உங்களுக்கு உணவாக வெளியாக்கினான். இன்னும் தன் கட்டளையினால் கடலில் செல்லுமாறு கப்பலை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தான். ஆறுகளையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான்”. அல்குர்ஆன் 14:32
படைத்த அல்லாஹ்வின் பூமி விசாலமானது எங்குவேண்டுமானாலும் சென்று உங்களுக்குரிய வாழ்வாதாரத்தை தேடிக்கொள்ளுங்கள், என அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.
”அவனே உங்களுக்கு பூமியை நீங்கள் வாழ்வதற்கு வசதியாக ஆக்கினான். எனவே அதன் பல பாகங்களிலும் சென்று அவனுடைய உணவிலிருந்து புசியுங்கள். அல்குர்ஆன் 67:15
அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இருக்கவில்லையா அதிலே நீங்கள் பரவிச்சென்று உங்களுக்குரிய வாழ்வாதாரத்தைத் தேடியிருக்க வேண்டாமா? என அல்லாஹ் கேட்கின்றான். அல்குர்ஆன் 4:97
ஆக அல்லாஹ்வின் பூமியில் நாம் வாழ்வதற்கு எந்த தடையுமில்லை, அல்லாஹ்வின் பூமியில் வாழ்வதற்கு யாரிடமும் போய் உரிமை கேட்கவேண்டிய அவசியமுமில்லை, யாரும் இந்த பூமியில் நிலையாக வாழப்போவதுமில்லை. பூமியில் பிறந்தவர்கள் எல்லாம் மரணித்து சென்று கொண்டேயிருக்கின்றனர்.
படைத்த நாயனான அல்லாஹ் அவனுடைய பூமியில் வாழ உரிமை வழங்கியது மட்டுமல்ல, எண்ணற்ற பாக்கியங்களையும் வழங்கியிருக்கின்றான். நாம் வாழ்வதற்காக பூமியை விரிப்பாக்கி வானத்தை முகடாக்கித் தந்துள்ளான். வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்து அதன் மூலம் தேவையான உணவு வகைகளையும் பழ வர்க்கங்களையும் காய்கறி வகைகளையும் படைத்துத்தந்தான். இவற்றை எல்லாம் நாம் அனுபவிக்கின்றோம். இன்னும் இதைப்போன்ற எத்தனையோ ஆயிரமாயிரம் பாக்கியங்கள்! அதற்காக படைத்த அந்த நாயனுக்கு முறையாக நன்றி செலுத்திவிட்டோமா? நிச்சயமாக இல்லை. அவனுடைய பாக்கியங்களை அனுபவித்துவிட்டு அவனுக்கு நன்றி கெட்டவர்களாக மனிதர்கள் அல்லாஹ்வின் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
அல்லாஹ் நமக்கு அறிவை தந்திருக்கின்றான். அந்த அறிவின் மூலம் சிந்தித்துப் பார்க்கின்ற உரிமை நமக்கு இருக்கின்றது. எத்தனைபேர் சிந்தித்துப் பார்க்கிறார்கள்? படைத்தவன் கொடுத்த உரிமை நமக்கு இருக்கின்றது. எத்தனைபேர் சிந்தித்துப் பார்க்கிறார்கள்? படைத்த அல்லாஹ்வை வணங்குவதற்கான முழு உரிமை நமக்கு இருக்கிறது. நம்மில் எத்தனைபேர் அல்லாஹ்வை முறையாக வணங்குகிறார்கள்? இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளை நிறைவேற்ற நமக்கு எந்த தடையுமில்லை. ஆனால் அதை உதாசீனப்படுதுகின்றவர்கள் தான் நம்மில் அதிகம்.
நாம் பெற்ற உரிமைகளுக்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதை விட்டுவிட்டு இல்லாத உரிமைகளுக்காக போராடுவது நன்றிகெட்ட செயல் அல்லவா? ”….நீங்கள் நன்றி செலுத்தினால் உங்களுக்கு நிச்சயமாக நான் அதிகம் தருவேன். நீங்கள் நன்றிகெட்டு வாழ்ந்தால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடுமையானது”. அல்குர்ஆன் 14:7
அல்-ஜன்னத் மாத இதழ் மார்ச் 2012 –தலையங்கம்
படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கி..
உரை:உஸ்மான்கான்(ENGLISH)JAQH மாநில மாநாடு படைப்புகளை விட்டு படைத்தவனை...
படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கி.
அஸ்க்கர் அலி மஹதிJAQH மாநில மாநாடு: படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கி....
படைத்தவன் ஒன்றா?இரண்டா?
:அப்துல்காதிர்உமரிJAQH மாநில மாநாடு: படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கிஇறைவன் ஒருவனா?அல்லது...
படைத்தவனின் சாபம்
அப்துல் மஜீத் மஹ்லரிJAQH மாநிலமாநாட்டுவீடியோபடைத்தவனின்சாபம் நம்மீதுவராமல் நம்மை...
படைப்புகளின்நோக்கம்
உமர்அலிஃபிர்தவ்ஸிJAQH மாநிலமாநாட்டுவீடியோஇறைவன் இந்தபூமியில் படைப்புகளை...
படைத்தவனுக்கு இடைத்தரகர்கள் வேண்டுமா?
அப்துற்றஹ்மான் மன்பஈJAQHமாநிலமாநாட்டுவீடியோபடைத்தவனுக்கு...
படைத்தவனை அறிந்துகொள்ளுங்கள்
முஹம்மது ஷ.பி JAQH மாநிலமாநாட்டுவீடியோஇறைவனை நாம் எவ்வாறு...
Copyright � ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்