நுழைவாயில்…
அழைக்கிறது அல்ஜன்னத் ”
எவர்கள் எங்கள் இறைவன் அல்லாஹ்தான் எனக்கூறி(அதன்மீதே)உறுதியாக நிலைத்து நின்றார்களோ அவர்களிடம் நிச்சயமாக மலக்குகள் வந்து, நீங்கள் பயப்படாதீர்கள்,கவலை கொள்ளாதீர்கள் உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட ஜன்னத்தைக் கொண்டு மகிழ்ச்சி அடையுங்கள் நாங்கள் உலகவாழ்க்கையிலும் உங்களுக்கு உதவியாகயிருந்தோம்,மறுமையிலும் ஜன்னத்தில் உங்கள் உள்ளம் விரும்புவதெல்லாம் உங்களுக்கு உண்டு.அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்கு கிடைக்கும்.பாவங்களை மன்னித்துக்கிருபை செய்பவனின் விருந்தாளியாக(ஜன்னத்தில்)தங்குங்கள் எனக்கூறுவார்கள்.”(அல்குர்ஆன் 41:30-32)
அல்லாஹ்தான் எங்கள் இறைவன்!அவனுக்கே அஞ்சுவோம்.நபி(ஸல்)அவர்கள் படைப்பினங்களில் மிகச்சிறந்தவர்களாக எங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரியாக திகழுகிறார்கள் என்ற உறுதியை உள்ளத்தில் ஏந்தி அதிலேயே ஊன்றி நின்று எவரெல்லாம் செயல்பட்டார்களோ அவர்கள் அல்லாஹ்வால் வாக்களிக்கப்பட்ட ஜன்னத்தை கண்டுகளிப்பேருவகை கொள்வார்கள்.
மறைகூறும் இந்த மறுமையின் ஜன்னத்துக்கு நம்மையெல்லாம் வாரிசுகளாக வார்த்தெடுப்பதற்கெனவே இங்கு ‘அல்ஜன்னத்’ மலர் ஒன்று இதழ் விரிக்கிறது.விரைவில் எதிர்பாருங்கள்! என கடந்த காலங்களில் வாக்களிக்கப்பட்ட இந்த அல்ஜன்னத்தை இன்று நீங்கள் கண்டு மகிழ்கிறீர்கள்!இனி மாதமொருமுறை இதன் நறுமணத்தை நாமெல்லாம் நகரவிருக்கின்றோம்.(இனன்ஷாஅல்லாஹ்)
இஸ்லாத்தில் இரவு கூடப் பகல்போன்று தெள்ளத்தெளிவாக நம் உள்ளங்கொள்ளுமளவுக்கு உணர்த்தப்பட்டுள்ளது.ஆனால் இதன் பகல்கூட பார்ப்பவர்களுக்கு இருள்போல் தெரியுமளவுக்கு இன்று பலரால் இது இருட்டடிப்புச்செய்யப்பட்டு விட்டது.
இஸ்லாமியப் பத்திரிகை எனும் பெயரில் பவனிவரும் பெரும்பான்மையானவை எளிய இனிய தூய இஸ்லாத்தை இருள்பாதையிலேயே இழுத்துச் சென்று கொண்டிருக்கின்றன. கலப்படமில்லாத நிலையில் இஸ்லாத்தை அதன் தூயநிலையில் துணிவுடன் எடுத்துரைத்திடும்பத்திரிகைகள் இன்னமும் போதிய அளவுக்கு நம்மிடையே வெளிவரவில்லை. ஆங்காங்கே நடைபெறும் ஏகத்துவப்பிரச்சாரத்தினால் மெய்யான இஸ்லாத்தை அறிகின்ற மக்கள் கூட்டங்கூட்டமாக இதன்பால் விரைந்து வருவதைக்காண்கிறோம்.இத்தகையவர்களுக்கு இருள் கலவாத வெள்ளைவெளேர் எனத்திகழும் நம் உயிரினுமினிய இஸ்லாத்தை அதன் அனைத்துப் பரிமாணங்களோடும் பரிமாற வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்.இந்த தீனவா தான் இந்த தேனிதழை கட்டவிழ்க்கச் செய்துள்ளது.
ஆம்!இருள் கிழித்திட வெளிக் கிளம்பிய ஒளிப்பிளம்பு இது.குர்ஆன்,ஹதீஸ் எனும் இறகுகளைக்கொண்டு இந்த ‘அல்ஜன்னத்’மறுமையின் ஜன்னத்தை நாடி மேலும் மேலும் பறந்தோடிவர இருக்கின்றது. குர்ஆன்,ஹதீஸ் தண்டவாளத்திலிருந்து தடம்புரளாது நெடும் பயணம் செய்யவிருக்கின்ற இந்த அல்ஜன்னத் தடம்புரள்பவர்களின் தடயங்களை சாட்சியங்களோடு,ஆதாரங்களோடு குறுக்கு விசாரணை செய்யவும் தயங்கிடாது.
தீன்நெறிச்சகோதர்களே!
இதோ! ”அல்ஜன்னத்” உங்களைத்தேடி வந்தவிட்டது.எங்களையுமறியாமல் இதில் குறை எதுவம் இடம்பெற்றிருக்கலாம்.அதைத்தவறு எனத் தவறாது சுட்டிக்காட்டுங்கள்!தக்க முறையில் அது ஏற்றுக்கொள்ளப்படும்.இங்கு உங்கள் மனம்விரும்பியதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கவிருக்கிறது.புகாரி,முஸ்லிம் நீங்கலாகவுள்ள ஏனைய நாற்பெரும் ஹதீஸ் நூல்களும் ஒரே நேரத்தில் இங்கு தொடர்ந்நது மொழிபெயர இருக்கின்றன.
எத்தனைப் பத்திரிகைகளைத்தான் வாங்குவது என அலுத்துக்கொள்கிறீர்களா?அல்ஜன்னத்தையம் ஒருமுறை வாங்கிப்பாருங்கள்.நீங்கள் இதன் விருந்தாளியாகவே தங்கிவிடுவீர்கள்!விண்ணின் ஜன்னத்திற்கு மனிதர்களைப்புடம்போட இது மண்ணில் மலர்ந்துள்ள மணம் கமழும் அல்ஜன்னத் என்பதை அறிந்து கொள்வீர்கள்.
யாஅல்லாஹ்! இதைப்படைப்பவர்களும்,படிப்பவர்களுமாகிய எங்கள் எண்ணம்,சொல்,செயல்களையெல்லாம் உன்னுடைய தூதர் வழியில் அமைவதற்கும் உன் அருளிலேயெ நாங்கள் நிலைத்து நிற்பதற்கும் அருள் புரிவாயாயக!மறுமையின் ஜன்னத்தை – சொர்க்கத்தை எங்களுக்கு வழங்குவாயாக!
சுவனபதி !
(அல்ஜன்னத்)
உண்மை விசுவாசிகளின் நோக்கம்-குறிக்கோள் யாவும் மறுமையில் இறையருளை முழுமையாக பெற்றுள்ள சுவனபதியின் வாழ்வே!ஏகத்தவ இன்பத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் விசுவாசி சுவனப்பேற்றை அடைவது திண்ணமே!
இம்மையின் செல்வங்கள் யாவும் கானல் நீரே!மறுமையே உண்மையான செல்வம்!மறுமைப்பேற்றை விரும்பும் விசுவாசிகள் ஒவ்வொருவரும் இம்மையில் இறைவனையே வணங்கி அவனுக்கு எவ்வித்திலும் இணைவைக்காது-நல்லறங்கiயும் இறைவனுக்காகவே ஆற்றி வாழ்தல் மிக்க அவசியமாகும்.
‘உங்கள் இறைவனின் மன்னிப்புக்கும் வானங்கள் பூமியின் அகலத்திற்கொப்பான சுவனபதிக்கும் விரைந்து கொள்ளுங்கள்.அது பயபக்தியுடையவர்களுக்காக(வே) சித்தப்படுத்தப்பட்டுள்ளது.’(அல்குர்ஆன்3:133)
”அன்றி அவர்கள் யாதொரு மானக்கேடான காரியத்தைச் செய்துவிட்டாலும் அல்லது(ஏதும் பாவமிழைத்துத்)தங்களுக்குத்தாங்களே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அல்லாஹ்வை நினைத்து(அவனிடமே)தங்களுடைய பாவங்களை மன்னிக்கத் தேடுவார்கள்.(அல்லாஹ்வும் அவர்களை மன்னித்து விடுவான்)அல்லாஹ்வையன்றி(இத்தகையோரின்0குற்றங்களை மன்னிப்பவன் யார்?அவர்கள் செய்த(தவறான) காரியத்தை(த்தவறென்று)அவர்கள் அறிந்து கொண்டால்(அதில்)நிலைத்திருக்க மாட்டார்கள்.(உடனே)அதிலிருந்து விலகி விடுவார்கள்.’
‘இத்தகையோருக்குரிய பிரதி பலன் அவர்கள் இறைவனுடைய மன்னிப்பும்,நீரருவிகள் எப்பொழுதும் ஓடிக்கொண்டிருக்கும் சுவன பதிகளும் ஆகும்.(அவர்கள் அங்கு என்றென்றும் தங்கி விடுவார்கள்.நன்மை செய்தோரின் கூலியும் நன்றே’.(அல்குர்ஆன் 3:135,136)
சுவனப்பேறு என்பது அல்லாஹ் விசுவாசிகளுக்காக வழங்கப்படக்கூடிய மகத்தான அருட்கொடையாகும்.இவ்வருட் கொடையைப் பெறக்கூடிய தகுதியுடயவர்களின் பண்பு நலன்களை மேலேயுள்ள இறை வசனங்கள் மூலம் அறிந்தோம்.நாமும் அத்தகைய நல்லோர்களின் குழுவிலே நம்மைச் சேர்த்துக்கொள்ள வேண்டாமா?சிந்தியுங்கள்!செயல்படுங்கள்!
இன்றைய சமுதாய அமைப்பிலே இறைநம்பிக்கையை வலுவிழக்கச் செய்யக்கூடிய பல மாயவலைகள் விரிக்கப்படுவதை நீங்கள் கண்டு உணரலாம்.முரீது என்ற பெயராலும் தரீக்கா என்ற பெயராலும் சில மோசடிக் கும்பல்கள் நடமாடுகின்றன.இஃது ஒருபுறமிருக்க போலி ஆலிம்களின் தாயத்து-தட்டை வியாபாரங்கள்-மௌலிது பாத்திஹாக்கள் பெயரால் இறைவனுக்கு இணைவைத்தல் முதலிய அனாச்சார-மூடச்சடங்குகள்-புதைக்குழி விழாக்கள் பிறிதொருபுறம் கும்மாளம் போடுகின்றன.
மார்க்கத்தை விற்று பிழைப்பு நடத்தும் சுயநலச் சோம்பேறிகளை எதிர்த்து ஜிஹாத்(புனிதப்போர்) நடத்தக்கூடிய நிலைக்கு நாம் தள்ளப்படுகின்றோம்.பாமரர்கள் ஏமாறுகின்றார்கள்-ஏமாற்றப்படுகின்றார்கள்!
மத்ஹபுகள் பெயரால் பூச்சாண்டிகள்!எல்லார்க்கும் ஒரே இறை-ஒரே மறை-ஒரே இறுதித்தூதர் என்றிருக்கும்போது மார்க்க அறிஞர்கள் சொல்லாததை-செய்யாததை அவர்கள் பெயராலேயே இட்டுக்கட்டி சொன்னார்கள்-செய்தார்கள் என்று தனித்தனிக் குழுவாகப் பிரித்து நம்மை நாமே பலவீனப்படுத்தி பிரிந்து நிற்கின்றோம்!இந்நிலை மாற நம்முடைய ஒரே குறிக்கோளான சுவனப்பேற்றை அடைய-அல்லாஹ்வுக்கு அஞ்சி-அவனுக்கு இணைவைக்காமல் வாழ்ந்து சிறப்போமாக!
தொழுகையின் வழி காட்டி
ஒரு மனிதன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டபின் அவன் செய்யவேண்டிய கடமைகளில் தொழுகை முதலிடம் பெறுகின்றது.அல்லாஹ் தன் திருமறையில் மிக அதிகமான இடங்களில் தொழுகை பற்றியே வலியுறுத்திக் கூறுகிறான்.
தொழுகையைக் கடைபிடிப்பதால் ஏற்படும் நன்மைகளையும் தொழுகையை விடுவதால் ஏற்படும் அபாயங்களையும் நபி(ஸல்) அவர்கள் மிக அதிக அளவில் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.வேண்டுமென்றே தொழுகையை விட்டவன் காபிராகிவிட்டான்(அஹ்மது,திர்மிதி)என்ற அளவுக்கு நபி(ஸல்) அவர்கள் கடும் எச்சரிக்கை செய்துள்ளனர்.
அல்லாஹ்வின் கிருபையால் தொழுகையை அடியோடு புறக்கணித்தவர்கள் இன்று தொழுகையைக் கடைபிடிக்கக்கூடிய நல்லநிலை தோன்றி இருக்கின்றது.அல்ஹம்துலில்லாஹ்!
தொழுகையை சிரத்தையுடன் நிறைவேற்றி வரும் நல்லவர்கள் தொழுகின்ற சரியான முறையை அறியாதவர்களாக இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக நிறைவேற்றுவதையே நாம் காண முடிகின்றது.
அல்லாஹ்வுக்காக-அவனது திருப்தியைப் பெறுவதற்காகத்தான் நாம் தொழுகின்றோம்.நமது தொழுகையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள வேண்டுமானால் அந்தத் தொழுகை அல்லாஹ்வின் தூதர்(ஸல்)காட்டித்தந்த முறைப்படி அமைய வேண்டும்.நாமாக நமது இஷ்ட்டத்திற்கு விதம் விதமாகத் தொழக்கூடாது.
என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்! (புகாரி,முஸ்லிம்)
என்ற நபி(ஸல்) அவர்களின் கட்டளைக்கேற்ப நமது தொழுகையை நாம் அமைத்துக்கொள்ள வேண்டும்.
நபி(ஸல்)அவர்கள் எவ்வாறு தொழுதார்கள்?தொழச் சொன்னார்கள்?என்ற விபரங்களையும் நபி(ஸல்)அவர்கள் பெயரால் சொல்லப்படும் ஆதாரமற்றவைகளையும் அதற்கான காரணங்களுடன் இந்தத் தொடரில் நாம் விளக்குவோம்.
எல்லோரும் எளிதாகப் புரிந்து கொள்வதற்காக கேள்வி,பதில் அமைப்பில் இந்தப்பகுதியை நாம் அமைத்திருக்கின்றோம்.
நிய்யத்…
ஐயம்: தொழுகைக்கு நிய்யத் அவசியமா?
தெளிவு: ஆம்! தொழுகை மற்றும் எல்லா வணக்க வழிபாடுகளுக்கும் நிய்யத் அவசியமாகும்.
‘செயல்கள் அனைத்தும்(ஏற்றுக்கொள்ளப்படவும் நன்மை பெறப்படவும்) எண்ணங்களைக் கொண்டே அமைகின்றன’ என நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்.அறிவிப்பாளர்:உமர்(ரலி)நூல்கள்:புகாரி,முஸ்லிம்.
நிச்சயமாக அல்லாஹ் உங்கள் உடல்களையோ உடைகளையோ பார்;ப்பதில்லை.உங்கள் உள்ளங்களைத்தான் பார்க்கிறான்.என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.அறிவிப்பாளர்:அபூஹூரைரா(ரலி) நூல்: முஸ்லிம்.
ஐயம்:தொழுகைக்காக எவ்வாறு நிய்யத் வைக்க வேண்டும்?
தெளிவு:எந்த நேரத் தொழுகையை எத்தனை ரக்அத்துகளை தொழ நாடுகிறோமோ இவற்றை மனதில் நினைத்து கொள்ள வேண்டும்.
ஐயம்:நிய்யத்தை வாயால் மொழிய வேண்டுமா?
தெளிவு: நிய்யத் என்ற அரபிமொழி பதம் நாடுதல்,எண்ணுதல் என பொருள்படும். எண்ணம் எண்ணத்தின் பாற்பட்டதாகும்.எனவே நிய்யத்துக்கும் நாவிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. நபி(ஸல்)அவர்களோ உத்தம ஸஹாபாக்களோ நிய்யத்தை நாவால் மொழிந்நதாக எவ்வித ஆதாரமும் இல்லை.
ஐயம்: சிலர் நிய்யத்தை (நவைத்து அன் உஸல்லி……..)என்று நாவால் கூறவேண்டுமென கூறுகின்றனரே?
தெளிவு:நிய்யத்தை இப்படி நாவால் கூறுவதற்கு குர்ஆனிலோ,ஹதீஸிலோ, உத்தம சஹாபாப் பொருமக்களின் வாழ்க்கையிலோ என்தவிதமான ஆதாரமும் கிடையாது.மாறாக இவ்வாறு நாவால் கூறவேண்டுமென சொல்பவர்கள் இது (பித்அத்)நூதனமான செயல்தான் என ஏற்றுக்கொண்டுள்ளனர்.நபி(ஸல்)அவர்கள் வணக்க வழிபாடுகளில் காட்டித்தராத ஒரு செயலை நாமாகவே நன்மை என கருதி செயல்படுவது பித்அத்தாகும்.நபி(ஸல்)அவர்களின் ‘அனைத்து பித்அத்துகளும் வழிகேடுதான்.அனைத்து வழிகேடுகளின் விளைவு நரகம்தான்(முஸ்லிம்) என்ற பொதுவான எச்சரிக்கைக்கு ஏற்ப்ப பித்அத்துகளில் நல்லவை தீயவை என பிரிக்காமல் பித்அத் என சொல்லப்படக்கூடிய அனைத்து செயல்களிலிருந்தும் தவிர்த்திருப்பது அவசியம்.
நபி(ஸல்)அவர்கள் தொழுத முறையை ஹதீஸ்கலை வல்லுனர்கள் தம் பல்வேற ஹதீஸ் தொகுப்புகளில் தெளிவுபடுத்தி உள்ளனர்.அவையனைத்திலும் நிய்யத்தை வாயால் மொழிந்ததாக அறிவிக்கப்படவில்லை.
என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்(புகாரி)என்ற நபிமொழிகளுக்கிணங்க ஒவ்வொரு முஸ்லிமும் நபி(ஸல்)அவர்கள் காட்டித்தந்த முறைப்படி தொழுவது கடமையாகும்.
தக்பீர் தஹ்ரிமா..
ஐயம்: தொழுகையை எவ்வாறு ஆரம்பிக்க வேண்டும்?
தெளிவு: கிப்லாவை முன்னோக்கி நின்று அல்லாஹூ அக்பர் என்ற தக்பீர் தஹ்ரிமா(தொழுகையை துவங்குவதற்கு முதன் முதலாக கூறப்படும் தக்பீர்)கூறி தொழுகையை ஆரம்பிக்க வேண்டும்.
நபி(ஸல்)அவர்கள் தங்களது தொழுகையை அல்லாஹூஅக்பர் எனக்கூறி ஆரம்பிக்கக்கூடியவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பாளர்:அபூஹூரைரா(ரலி)நூல்கள்:முஸ்லிம்,இப்னுமாஜா
மாற்றாரின் பார்வையில் இஸ்லாம்…
இன்றைய உலகில் மனித சமுதாயத்தை மேம்படுத்துகிறோம் என்று பறைசாற்றக்கூடிய பல்வேறு மதங்கள்,இயக்கங்கள் மலிந்து கிடப்பதை நாம் காண்கிறோம்.எல்லா மதங்களும் மதவாதிகளும் தங்கள் மதமே சிறந்தது என்ற அறிவித்துக்கொள்கின்றனர்.தங்கள் மதத்தைப் பிரச்சாரமும் செய்கின்றனர்.எனினும் சிந்தனையாளர்கள் மற்ற மதங்களைவிட இஸ்லாம் பலவகையில் சிறந்து விளங்குவதை ஒப்புக்கொள்கிறார்கள்.அவர்களில் சிலர் இஸ்லாத்தில் தங்களையும் இணைத்துக் கொள்கின்றனர்.
‘இஸ்லாம்’ வெறும் வணக்க வழிபாடுகளை மட்டும் சொல்லித்தரும் மதமாக இல்லாமல் மனித வாழ்வின் எல்லாப்பிரச்சினைகளையும் கவனிக்கிறது!அதில் தலையிடுகிறது!தக்க தீர்வையும் சொல்லுகிறது.அன்றிலிருந்து இன்றுவரை மனிதக்கரங்களால் மாசுபடுத்தப்பட முடியாத மகத்தான வேதத்தை இஸ்லாம் மட்டுமே வைத்திருக்கிறது என்றெல்லாம் இஸ்லாத்தைப்பற்றி நற்சான்று வழங்குபவர்கள் இஸ்லாத்தில் ஒருசில சட்டங்களைப்பற்றி அதிருப்தி அடைகிறார்கள். அதன் காரணமாக இஸ்லாத்தில் தங்களையும் இணைத்துக்கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர்.
இஸ்லாத்திற்குள் தம்மை இணைத்துக் கொண்டவர்கள் ‘குர்ஆன் கூறுகிறது என்று சொன்னால் திருப்தி அடைந்து விடுகிறார்கள்.நபிகள்(ஸல்) அவர்கள் கூறிவிட்டார்கள் என்று சொன்னால் ஏற்றுக்கொள்கிறார்கள்.ஆனால் இஸ்லாத்திற்கு வெளியே இருப்பவர்கள் குர்ஆன் இறைவனுடைய வேதம் என்றும் நபிகள்(ஸல்)அல்லாஹ்வின் தூதர் என்றும் நம்பாத காரணத்தால் இஸ்லாமிய சட்டங்கள் சிலவற்றில் சந்தேகம் கொள்கிறார்கள்,மறுக்கிறார்கள்,விமர்சிக்கின்றார்கள்.
இத்தகையவர்களின் ஐயங்களை தர்க்கரீதியாக-அவர்களின் அறிவு ஏற்றுக்கொள்ளும் வண்ணம் எடுத்தவைக்கும் கடமை நமக்கு இருக்கிறது.ஏனெனில் இஸ்லாம் நமக்கு மட்டும் சொந்தமான மார்க்கமல்ல.முழு உலகுக்கும் அருளப்பட்ட மார்க்கம்.இஸ்லாத்திற்கு வெளியே உள்ளவர்களுக்கும் இஸ்லாத்தை உரிய முறையில் எடுத்துச்சொல்லும் கடமையை நாம் நிறைவேற்றியாக வேண்டும்.இவர்களின் வாதங்கள் அறிவு பூர்வமானதாக தோன்றுவதால் பரம்பரை முஸ்லிம்களில் சிலரும் கூட இநந்த வாதத்திற்கு பலியாகி இஸ்லாத்தின் சட்டங்கள் நியாயமற்றவை என்ற எண்ணத்திற்கு வந்துவிடுகின்றார்கள்.
இஸ்லாத்தின் காவலர்கள் என்று தங்களுக்கு பட்டம் சூட்டிக் கொண்டவர்கள் இதையெல்லாம் கண்டுகொள்வதாக இல்லை.நம்மவர்கள் இஸ்லாத்தை விமர்சிக்கிறார்களே இவர்களின் விமர்சனங்களுக்கு விளக்கம் வேண்டுமே என்றெல்லாம் சிந்திப்பதாக இல்லை.
அரைத்தமாவையே மீண்டும் மீண்டும் அரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆம்! புதிது புதிதாக இவர்களால் உருவாக்கப்பட்டு வலுக்கட்டாயமாக இஸ்லாத்தில் நுழைக்கப்பட்ட மூடநம்பிக்கைகள் போலிச்சடங்குகள் இஸ்லாத்தைக் குறைகாண்பவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துவிட்டன.
இஸ்லாத்திற்கு வெளியே இருப்பவர்கள் இஸ்லாத்தின் மீது சுமத்துகின்ற குற்றச்சாட்டுகளுக்கு உரிய முறையில் நாம் விளக்கம் சொல்லி ஆகவேண்டும். மாதிரிக்கு சில குற்றச்சாட்டுகளைக் காண்போம்.
‘இஸ்லாம் பெண்களுக்கு அநீதி இழைத்துவிட்டது’ இதுதான் புதுமை விரும்பிகளின் மிகப்பெரும் குற்றச்சாட்டு.இதனை மெய்ப்பிக்க சில சான்றுகளையும் அவர்கள் எடுத்துக்காட்டுகிறார்கள்.
ஒருஆண் ஒரு பெண்ணைத் திருமணம் செய்கிறான்.ஆணுக்குப் பெண்ணை பிடிக்கவில்லை என்றால் அடுத்த நிமிடமே அவளை விவாக விலக்குச் செய்துவிடலாம்.ஏன் எதற்கு என்றெல்லாம் கேள்வி கேட்க முடியாது.தன் இளமையை ஒரு ஆணிடம் ஒப்படைத்த ஒரு பெண் நிர்க்கதியாகி விடுகிறாள்.இது மிகப்பெரிய கொடுமை அல்லவா?
ஒரு தந்தைக்கு ஒரு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையுமிருந்தால் தந்தையின் சொத்தில் ஆணுக்கு மட்டும் இருபங்குகளும் பொண்ணுக்கு ஒரு பங்கும் மட்டுமே இஸ்லாம் தருகின்றது.இது பாரபட்சமில்லையா?ஆணும் பெண்ணும் சமம் என்று முழங்கக்கூடிய கால கட்டத்தில் பெண்ணுக்கு மட்டும் கட்டுப்படான உடைகள் தேவையின்றி வெளியே செல்லக்கூடாது என்பது பொன்ற கட்டுப்பாடுகள் கட்டுப்பெட்டித்தனம் அல்லவா?அக்கிரமம் அல்லவா?
ஒரு ஆண் அதிகபட்சம் நான்கு மனைவிகளை மணமுடிக்கலாம்! ஒரு பெண் எந்தச் சந்தர்ப்பத்திலும் அதிக பட்சமாக இரண்டு ஆண்களை ஒரே நேரத்தில் மணமுடிக்கக்கூடாதா?ஆணுக்கு ஒரு நீதி! பெண்ணுக்கு ஒரு நீதியா?
‘ஒருவனிடம் அடிமைப்பெண்கள் இருந்தால் திருமணம் செய்யமலே உறவு கொள்ளலாம் என்ற சட்டத்திற்கும் விபச்சாரத்திற்கும் என்ன வித்தியாசம்? இது முறை கேடு இல்லையா?
குற்றச்சாட்டுகளை நிரூபிக்க ஆண்களாக இருந்தால் இரண்டு சாட்சிகள் போதும்,பெண்கள் சாட்சி சொல்வதென்றால் நான்கு பேர் வேண்டும் என்று சட்டம் வகுத்ததன் மூலம் பெண்களை அரை மனிதனாக கருதுவது அக்கிரமம் இல்லையா?
தொழுகையில் ஆண்களுக்கு மட்டும் இமாமத் செய்யும் தகுதி உள்ளதாக கூறும் இஸ்லாம் பெண்களுக்கு மறுக்கிறதே!இது சரிதானான?
இப்படி அடுக்கிக்கொண்டே போகிறார்கள்.மொத்தத்தில் பெண்களுக்கு இஸ்லாம் அநியாயமே செய்துள்ளது என்று உரத்துச் சொல்கிறார்கள்.
மதத்தை அடுத்தவர்களின் மீது வலுக்கட்டாயமாக இஸ்லாம் திணிக்கிறது.இஸ்லாத்தை ஏற்காதவர்களுடன் எதிர்த்து போர் புரியச் சொல்கிறது.கண்ட இடங்களில் வெட்டி கொல்லச் சொல்கிறது.ஜிஹாத் என்னும் மதப்போரை தூண்டி உலக அமைதிக்கு இஸ்லாம் வேட்டு வைக்கின்றது!.இதுவும் அவர்களின் குற்றச்சாட்டுகளில் ஒன்று.
இயல்பிலேயே தவறு செய்பவனாகப் படைக்கப்பட்டுள்ள மனிதன் சில வேளைகளில் தவறு செய்துவிடும்போது அவனிடம் இஸ்லாம் கடுமை காட்டுகிறது.சாதாரணத் திருட்டுக் குற்றத்திற்காக கையை வெட்டவேண்டுமா? வுpபச்சாரம் செய்துவிட்டால் அவனைக் கொலை செய்ய வேண்டுமா?மது அருந்தினால் கசையடி கொடுக்க வேண்டுமா? இவை காட்டு மிராண்டித்தனம் அல்லவா? இப்படியும் ஒரு குற்றச்சாட்டு!
உயிரினங்களை சர்வ சாதாரணமாகக் கொலை செய்வதை இஸ்லாம் அனுமதிக்கின்றதே! உயிருள்ள ஒரு ஜீவனிடம் கருணை காட்டக்கூடாதா? என்று ஜீவ காருண்யம் பேசுகிறார்கள் சிலர்.
சினிமா,தொலைக்காட்சி,இசைக்கருவிகள் போன்ற நவீன கண்டு பிடிப்புகளையும் கூட பயன்படுத்துவதற்கு இஸ்லாம் அனுமதிக்கவில்லையே!இதன் மூலம் விஞ்ஞான வளர்ச்சிக்கு இஸ்லாம் முட்டு கட்டை போடுகின்றதே! இதன்மூலம் பிற்போக்கு மார்க்கம் என்பது நிரூபணமாகவில்லையா?
இஸ்லாத்தை நோக்கி வீசப்படும் கேள்வி கணைகளில் இவை சில.இவற்றுக் கெல்லாம் தர்;க்கரீதியாக நாம் விளக்கம் சொன்னால் மட்டுமே இஸ்லாத்தின் மீதுள்ள தப்பான எண்ணமும்,கசப்புணர்ச்சியும் நீங்க முடியும்.அதற்காக இந்தப்பகுதி துவங்கப்படடடுள்ளது.
இஸ்லாத்தைப் பற்றி மற்றவர்கள் கூறும் வேறு குற்றச்சாட்டுகளை சந்திப்பவர்கள் அவற்றையும் ‘அல்ஜன்னத்‘துக்கு அனுப்பிவையுங்கள்!அவற்றுக்கும் இந்தக்கட்டுரைத் தொடரில் விளக்கம் தரப்படும்.
முதலில் பலதாரமணம் பற்றி மாற்றார்கள் எழுப்பும் சந்தேகங்களையும் அதற்கு நியாயமான பதில்களையும் அடுத்த இதழில் காண்போம்.(வளரும்)
சத்திய முழக்கம்
(மூன்றாம் பகுதி)
குமரி மாவட்டம் கோட்டாரில் 18-07-86,19-07-86 ஆகிய இரு தினங்களில் ‘முனாழரா’என்னும் விவாத அரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு நடந்ததை தமிழ் கூறும் முஸ்லிம்களில் அனேகர் அறிவர்.
தவ்ஹீத் அணிக்கும் பரேலவி அணிக்கும் இடையே இந்த விவாதம் நடந்தது.தவ்ஹீத் அணியின் சார்பில் (1)மௌலவி கே.எஸ். ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி,(2)மவ்லவி அப்துல் ஹமீது ஆமிர் உமரி(3)மவ்லவி எஸ்.கமாலுத்தீன் மதனி(4)மவ்லவி எம். அப்துல் ஜலீல் மதனி(5)மவ்லவி பி.ஜைனுல் ஆப்தீன் ஆகியோர் பங்கேற்றனர்.
பரேலவி அணியின் சார்பில்(1)எ.எல்.எம். பத்ருத்தீன் ஆலிம்(2)ராஹித்தம்பி ஆலிம்,(3)எ.பி.அபுபக்கர் முஸ்லியார்(காந்தபுரம்)(4)முஹ்யித்தீன் குட்டி முஸ்லியார்(5)பக்ருத்தீன் முஸ்லியார் ஆகியோர் கலந்து கொண்டனர்.பொது மக்களும் விவாதத்தைக் கேட்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
விவாதத்துக்கு மூன்று தலைப்புக்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன.(1)வஸீலா,(2)தொழுகைக்குப்பின்(கூட்டு)துஆக்கள்,ஈஸால் ஸவாப் இம்மூன்று தலைப்பகளில் விவாதம் நடந்தேறியது.
ஓவ்வொரு அணியினருக்கும் முதலில் அரை மணி நேரம்,அடுத்து அரை மணி நேரம்,இறுதியாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டது.அதாவது ஒவ்வொரு அணியினரும் இரண்டு மணி நேரம் தங்கள் வாதங்களை எடுத்து வைத்தனர்.
பரேலவி அணியினர் வாதம் செய்யும்போது வெளியூர்களில் இருந்து அழைத்துவரப்பட்டவர்களால் தக்பீர் முழக்கம் செய்யப்பட்டது.தவ்ஹீத் அணியினர் பேசும்போது கூச்சலும்,குறுக்கீடுகளும்,ஏளனச்சிரிப்புகளுக்கும் குறைவில்லை.
தவ்ஹீத் அணி அதன்பிறகுதான் பலமாக இந்தப்பகுதியில் வேரூன்றியது.இன்றைக்கு மாநிலம் தழுவிய மாநாடு நடத்தும் அளவுக்கு வளர்ச்சியும் பெற்றது.
அந்த விவாதத்தைத் தங்கள் காதால் கேட்டவர்கள் தவ்ஹீத் அணியை நோக்கி அதன்பிறகு திரண்டனர்.விவாதத்துக்கு நடுவர் என்று ஏற்படுத்தப் படாமல் மக்களே நீதிபதிகளாக இருந்து உண்மையை விளங்கிக் கொண்டார்கள்.பரேலவி அணியினரின் மகத்தான தோல்விக்கு இந்த மாநாடு சான்று கூறிக்கொண்டிருக்கின்றது.
இந்த மூன்று தலைப்புகளில் இரண்டு தலைப்புகள் ஏற்கனவே புத்தகமாக வெளியிடப்பட்டன.மூன்றாவது தலைப்பு மட்டும் வெளியிடப்படவில்லை.
ஏதிர் தரப்பினரும் நம்மவர்களில் சிலரும் மூன்றாம் பாகம் வெளியிடப்படாததற்கு தவறான காரணங்களும் நோக்கங்களும் கற்பித்துக் கொண்டிருப்பதை நாம் கேள்விப்படுகின்றோம்.
எனவே புத்தகமாக வெளியிடப்படாத ‘ஈஸால் ஸவாப்’ என்ற தலைப்பில் நிகழ்ந்த விவாதங்களை அப்படியே அல்ஜன்னத் தொடர்ந்து வெளியிட உள்ளது.
ஓப்பந்தப்படி விவாதத்தை இறுதியாக முடிக்கும் வாய்ப்பு பரேலவிகளுக்குக் கிடைத்ததால் அவர்கள் உளறி க் கொட்டிய அபத்தங்களுக்கு பதில் தரும் வாய்ப்பு நமக்கில்லாமல் போய்விட்டது.விவாதம் முழுமையாக வெளியிட்டபின் தொடர்ந்து அந்த அபத்தங்களுக்கு நமது பதில்களும் இடம்பெறும்(இன்ஷாஅல்லாஹ்)
முதலில் தவ்ஹீத் அணியின் சார்பில் மவ்லவி பி.ஜைனுல் ஆப்தீன் விவாதத்தைத் துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார் அதை இனி காண்போம்(வளரும்)
குறுக்குவிசாரணை !!!
தமிழ்கூறும் முஸ்லிம் உலகில் ஒர் விசித்திரமான நிலை நீண்ட காலமாக நிலை பெற்றுள்ளது.அந்த நிலை மாறி விடுமானால் இந்த சமுதாயத்தில் ஊடுருவிவிட்ட ஏராளமான தீமைகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய்விடும்.
மார்க்கம் என்ற பெயரால் யாராவது ஏதாவது கூறிவிவிட்டால் அதை அப்படியே ஏற்றுக் கொள்கின்ற அலட்சிய மனப்பான்மையையே நாம் குறிப்பிடுகின்றோம்.கால்கிலே கத்தரிக்காய் வாங்குவதற்காக எடுத்துக்கொள்ளும் அக்கரைகூட மார்க்க விசயங்களில் எடுத்துக்கொள்ள மறுக்கிறார்கள்.நாலணாவுக்கு நல்லெண்ணை வாங்குவதற்குக்கூட எவ்வளவு பரிசீலனை!எத்தனை கேள்விகள்!அதில் பத்தில் ஒரு பங்கை மார்க்க விசயத்தில் பயன்படுத்தியிருந்தால் கூட பல நூறு தீமைகள் ஒழிந்திருக்குமே!
என்னிடமே கேள்வி கேட்கிறாயா?என்னையே விமர்சனம் செய்கின்றாயா?நான் சொல்வதற்கு உனக்கு ஆதாரம் வேறு சொல்ல வேண்டுமா?என்ற ஆவணப் போக்குடன் பெரும்பாலான முல்லாக்கள் நடந்து கொண்டதோடு மக்களையம் அப்படியே நம்பவைத்து விட்டார்கள்.
போலி முல்லாக்கள் தங்கள் சுயலாபம் கருதி இதைச் செய்கிறார்கள் என்றால் மக்களாவது தாங்கள் ஏமாற்றப்படுவதை உணர வேண்டாமா?ஏனோஅவர்களில் பலர் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
நயவஞ்சகர்களின் தலைவன் அப்துல்லாஹ் இப்னு உபய் இறந்தபோது அவனது மகன் அப்துல்லாஹ்(ரலி)என்ற நாயகத்தோழர் அண்ணலாரிடம் வந்து தன் தந்தையின் பிணத்திற்கு தொழுகை நடத்த வரவேண்டுமென்றும் அவனது உடலில் அணிவித்து அடக்கம் செய்வதற்காக அண்ணலார் தமது சட்டையை அன்பளிப்பாக தரவேண்டுமென்றும் வேண்டிநின்றார்.அண்ணலார் அவ்வாறே தமது சட்டையை அன்பளிப்பாக தந்ததுடன் அவனது சவத்திற்கு தொழுகை நடத்தவும் புறப்பட ஆயத்தமாகிவிட்டார்கள்.அப்போது அங்கே இருந்த உமர்(ரலி)அவர்கள் புறப்பட்ட அண்ணலாரின் சட்டையைப் பிடித்து இழுத்து நிறுத்தி அண்ணலே!அல்லாஹ் உங்களை தடுத்திருக்கும்போது அவனுக்குத் தொழுகை நடத்தப் போகிறீர்களா? என்று அல்லாஹ்வின் தூதரை நேரடியாகக் கேட்டார்கள்.அதற்கு அண்ணலார் நீர் அவர்களுக்காக மன்னிப்புக் கோரினாலும் மன்னிப்புக் கோராவிட்டாலும், அவர்களுக்காக எழுபது தடைவ மன்னிப்புக் கோரினாலும் அல்லாஹ் அவர்களை மன்னிக்க மாட்டான்( அல்குர்ஆன்:9:80)என்று அல்லாஹ் கூறி இந்தப் பிரச்சனையை என் விருப்பத்திற்கு விட்டிருக்கிறான்.(எழுபது தடவைகள் அவர்களுக்காக மன்னிப்புக் கேட்டாலும் நான் மன்னிக்க மாட்டேன் என்று தானே கூறுகிறான்)நான் அதற்கு மேலும் அவனுக்காக மன்றாடப் போகிறேன் எனக்கூறிவிட்டு அவனுக்காக தொழுகை நடத்தச் சென்று விட்டார்கள்.
தொழுகை முடிந்து வந்ததும் ‘(நபியே)அவர்களில் இறந்து விட்ட எவனுக்கும் இனி ஒருபோதும் தொழுகை நடத்தாதீர்!அவனுடைய மண்ணறைக்கருகிலும்(அவர்களுக்காக மன்னிப்புக் கோரி)நிற்காதீர்;!(9:84)என்ற வசனம் அருளப்பட்டது.
அறிவிப்பவர்:இப்னு உமர்(ரலி)ஆதாரம்: புகாரி
அல்லாஹ்வின் தூதரிடமே அவர்களின் அன்புத்தோழர்கள் கேள்வி கேட்டிருக்கிறார்கள்.விளக்கம் தேடி இருக்கிறார்கள்.அவர்களுக்கும் மேலாகவன்றோ சிலர் தங்களைக் கருதிவிட்டனர்.
ஒரு யூதர் நபி(ஸல்)அவர்களிடம் வந்து முஸ்லிம்களாகிய நீங்களும் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறீர்களே!(எவ்வாறெனில் நீங்கள் உங்கள் நபியை நோக்கி)அல்லாஹ்வும் நீங்களும் நாடியவாறே(நடந்துள்ளது)என்கிறீர்கள்!கஃபாவின் மீது ஆணையாக என்கிறீர்கள்!(அல்லாஹ்வுக்கு இணையாக அவனது தூதரையும் அவனது ஆலயத்தையும் ஆக்கிவிட்டீர்களே!என்று கேட்டார்.
அதன் பிறகு சத்தியம் செய்வதென்றால் கஃபாவின் இறைவன்மீது ஆணையாக என்று கூறுமாறும்,அல்லாஹ் நாடிய விதமாகவே நடந்தது.அதன்பிறகே நீங்கள் நாடிநீர்கள் என்று (தன்னைப்பார்த்துச்)சொல்லுமாறு கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்;குதைலா(ரலி) நூல்கள்:அஹ்மத்,நஸயீ,இப்னுமாஜா.
ஒரு யூதருடைய கேள்வியில் உள்ள நியாயத்தை எவ்வளவு மதித்திருக்கின்றார்கள்.அதில் உள்ள உண்மையை ஒப்புக்கொண்டு தன் தோழர்களைத் திருத்துகிறார்கள்.
இந்த நிலை தோன்ற வேணடாமா?அல்லாஹ்வின் தூதருக்கும் மேலானனவர்களாகத் தங்களைக் கருதிக் கொண்டிருப்போரை குறுக்கு விசாரணை செய்ய வேண்டாமா?மார்க்கம் என்று எதையாவது சொன்னால் அல்லாஹ் சொல்லி இருக்கிறானா?அல்லாஹ்வின் திருத்தூதர்(ஸல்)கூறி இருக்கிறார்களா?என்று கேட்க வேண்டாமா?எண்ணிப்பாருங்கள்!
நான்கு இமாம்களில் ஒருவரைப் பின்பற்றுவது வாஜிப் என வாதிடுவோரே! அவர்களிலிருந்தாவது நீங்கள் பாடம் படித்தது உண்டா?இமாம்களின் காலத்தில் ஒருவர் கருத்தை இன்னொருவர் விமர்சித்தது இல்லையா?தனது தீர்ப்பு தவறானது என்று உணரும் போது உண்மையை பகிங்கரமாக ஒப்புக்கொண்டதில்லையா?இமாம் ஷாபியி அவர்கள் தமது ஆசிரியப் பெருந்தகை இமாம் மாலிக் அவர்களுக்கு எதிராகவும்,இமாம் அஹ்மது இப்னு ஹம்பல் தனது ஆசிரியரான இமாம் ஷாபியி அவர்களுக்கு எதிராகவும் தீர்ப்புகள் வழங்கியதில்லையா?தனது ஆசிரியர் கூறிவிட்டார் என்று தலையாட்டிக் கொண்டிருக்கவில்லையே! உங்களைப்பற்றி nhம்பவும் தான் உயர்வாக எண்ணிவிட்டீர்கள்.
யாராக இருந்தாலும் தாட்சண்யமின்றி தவறுகளைச் சுட்டிக்காட்டும் மனப்பான்மை மட்டும் வளர்ந்துவிட்டால் ஆதாரங்கள் கேட்கும் துணிவு வந்துவிட்டால் அதைவிட பொறற்காலம் என்ன இருக்க முடியும்?
இந்த பீடிகை எதற்கு என்கிறீர்களா?நாங்களும் மனிதர்கள் தான். அதுவும் சாதாரண மனிதர்கள் தான்!நாங்கள் அறிந்ததை விட அறியாதவைகளே அதிகம் உள்ளன.நாங்கள் தான் அறிஞர்கள் என்று நாங்கள் கருதவில்லை.எங்களைவிட பன்மடங்கு சிறந்த அறிஞர் பெருமக்கள் வெளியில் இருந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நன்றாகவே அறிகிறோம்.அந்த அடிப்படையில் எங்களிடம் ஏற்படும் தவறுகளை-முரண்பாடுகளை-ஆதாரமற்றவைகளை எங்களுக்குச் சுட்டிக்காட்டுங்கள்!அதற்காகவே இந்தப் பகுதி.
ஹதீஸ்களின் பெயரால்…..
ஸஹாபாக்களின் சிறப்புக்கள்…
இன்று தமிழகத்தில் ஹதீஸ் என்ற பெயரில் நபி(ஸல்)அவர்கள் சொல்லாத பல ஹதீஸ்களை அவர்கள் சொன்னதாக மவ்லவிகளில் பலர் ஜூம்ஆ மேடைகளிலும்,பொதுக்கூட்டங்களிலும் சொல்லி இஸ்லாத்திற்குக் களங்கம் ஏற்படுத்தி வருவதைக் காண்கிறோம்.இவ்வாறு தவறாகப் பரப்பப்பட்டுவரும் ஹதீஸ்களை தெளிவு படுத்துவோம் இன்ஷாஅல்லாஹ் நாங்கள் சொல்வது சரியில்லை எனக்காண்கின்ற ஆலிம்கள் தங்கள் வாதத்தைத் தெளிவான ஆதாரங்களோடு எழுதுவார்களானால் அதை எங்கள் பத்திரிகையில் வெளியிடுவோம்.
நபிகள் நாயகம் முஹம்மது(ஸல்)அவர்களின் உம்மத்துகளில்ஸஹாபாக்களின் தனிச்சிறப்பை எவருமே மறுக்கமுடியாது.நபி(ஸல்)அவர்களோடு வாழ்ந்து அவர்களிடம் நெருங்கிப்பழகி அவர்களிடம் பாடம் கற்ற நபித்தோழர்களின் மதிப்பபை இந்த உம்மத்தில் எந்த இமாம்களும்,அவ்லியாக்களும் அடைய முடியாது.காலமெல்லாம் இறை வழிபாட்டில் செலவு செய்தாலும் ஒரு ஸஹாபியின் அந்தஸ்த்தை எவரும் பெறவே முடியாது.இது ஷியாக்களைத் தவிர இந்த உஉம்மத்துக்கள் அனைவரும் ஏகோபித்து ஒப்புக்கொண்ட பேருண்மையாகும்.நபி(ஸல்)அவர்களின் ஏராளமான பொன்மொழிகள் இந்த உண்மையை நமக்குத் தெளிவாக்குகின்றன.
‘எனது தோழர்களை ஏசாதீர்கள்!உங்களில் எவரும் உஹது மலை அளவு தங்கத்தைச் செலவு செய்தாலும் அந்த ஸஹாபாக்கள் இருகையளவு செய்த தர்மத்துக்கோ அல்லது அதைவிட பாதியளவு செய்த தர்மத்துக்கோ ஈடாக முடியாது’என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:அபூசயீத் அல்குத்ரி(ரலி) ஆதாரம்:புஹாரி,முஸ்லிம்.
நபித்தோழர்களின் தனிச்சிறப்பை எடுத்துரைக்க நபி(ஸல்)அவர்களின் இந்த நற்சான்று ஒன்றெ போதுமானது.எவ்வளவ முயற்சி செய்தாலும் எவரும் அவர்களின் நிலையை எட்டவே முடியாது என்ற தகுதியைவிட வேறு எந்த தகுதி உயர்ந்ததாக இருக்க முடியும்?
அவர்களின் தூய்மையான எண்ணமும்,மிகச்சிரமமான காலத்தில் நபி(ஸல்)அவர்களுடன் தோளோடு தோள் நின்று செய்த தியாகங்களும்,மரணம் நிச்சயம் என்று தெரிந்திருந்தும்-வெற்றி பெறுவோமா என்பது தெரியாத நிலையில் போர் முனைக்குச்சென்ற நெஞ்சுறுதியும்,சுட்டெரிக்கும் பாலை மணலில் பொசுக்கப்பட்டபோதும் தூக்கு மேடையில் நிறுத்தப்பட்ட போதும்,ஈமானில் அவர்களுக்கு இருந்த பிடிப்பு-இன்று நினைத்தாலும் நம் கண்களை கலங்க வைத்து விடுகின்றது.(ரழியல்லாஹீ அன்ஹீம் வரழு அன்ஹீம்)
இவ்வளவு சிறப்புமிக்க நிலையை எவர்தான் அடைய முடியும்?ஆனால் இன்று சிலர் ஸஹாபாக்களின் சிறப்பை எடுத்துச்சொல்கிறோம் என்று கூறிக்கொண்டு இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களின் மூலம் ஸஹாபாக்களின் சிறப்பை நிலைநாட்டத் துவங்கியுள்ளனர். ஆவ்வகையில் மேடைகள் தோறும் முழங்கப்படுகின்ற ஒரு ஹதீஸைப் பார்ப்போம்.
‘அல்ஹாபி கன்னுஜூமி பி அய்யிஹிம் இக்ததைத்தும் இஹ்ததைத்தும்’
பொருள்:’என்தோழர்கள்விண்மீன்களைப்போன்றவர்கள்.அவர்களில்எவரை நீங்கள் பின்பற்றினாலும் நீங்கள் நேர்வழி அடைவீர்கள்’.
இப்படி ஒரு ஹதீஸை பல மவ்லவிகள் கூறுவதை நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம்.இந்த ஹதீஸ் ஒரு சில கிதாபுகளில் இடம்பெற்றிருந்தாலும் இதை அறிவிப்பவர்கள் வரிசையில் பல கோளாறுகள் உள்ளன.இந்த ஹதீஸ் உணர்த்துகின்ற கருத்தும் குர்அன் ஹதீஸ் போதனைகளுக்கு முரண்படுகின்றது.முதலில் இதன் அறிவிப்பாளளர் வரிசையில் உள்ள குறை பாடுகளை பார்ப்போம்.
இந்த ஹதீஸை இமாம் இப்னுஹஸ்மு(ரஹ்)அவர்கள் தமது ‘அல்இஹ்காம்’ என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள்.இதைப்பதிவு செய்த அதே இமாம் அவர்கள் இந்த ஹதீஸைப்பற்றி ‘இது ஏற்கத்தகாத ஹதீஸாகும் என்று குறிப்பிடுகிறார்கள்.இதன் அறிவிப்பாளர்களில் ஒருவராகிய ஸலாம் இப்னு ஸூலைம் என்பவர் நிறைய இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை அறிவிப்பவராவார்.இந்த ஹதீஸூம் அத்தகைய இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களில் ஒன்றாகும் என்று இமாம் இப்னுஹஸ்மு அவர்களே குறிப்பிடுகிறார்கள்.(அல்இஹ்காம் பாகம்6,பக்கம்28)
இந்த ஹதீஸை இமாம் இப்னு அல்தில்பர்(ரஹ்)அவர்களும் தமது ‘ஜாமிவுல் இல்மி’ என்ற நூலில் பதிவு செய்துள்ளனர்.பதிவு செய்துவிட்டு அதன் அடியில் இந்த ஹதீஸை அறிவிப்பவர்களில் இடம்பெறுகின்ற ‘ஹாரிஸ் இப்னு குஸைன்’ என்பவர் ஹதீஸ் துறையில் அறியப்படாதவர்.இது ஏற்கதக்க ஹதீஸ் அல்ல என்றும் குறிப்பிடுகிறார்கள்.(ஜாமிவுல் இல்மி,பாகம்2,பக்கம்91)
அந்த ஹதீஸைப் பதிவு செய்துள்ள இருபெரும் இமாம்களும் இது இட்டுக்கட்டப்பட்டது என்று தெளிவாகவே குறிப்பிடுகிறார்கள்.இதன் பின்னரும் நபி(ஸல்)அவர்கள் பெயரால் இதை ஒவ்வொரு மேடையிலும் முழங்ககிறார்களே அதுதான் வியப்பாக உள்ளது.
மேலும் இந்த ஸலாம் இப்னு ஸீலைம் என்பவரைப்பற்றி இமாம் இப்னு ஹர்ராஷ் அவர்கள் இவர் பெரும் பொய்யர் என்றும்,இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் இவர் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை அறிவிப்பவர் என்றும் குறிப்பிடுகிறார்கள்.
இமாம் அஹ்மது இப்னு ஹன்பல்(ரஹ்)அவர்கள இந்த ஹதீஸ் ஆதாரமற்றது என்று குறிப்பிடுகிறார்கள் என இப்னு குதாமா தமது ‘அல்முன்தகப்’ என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள்.
அதே கருத்தை உணர்த்தக்கூடிய-வேறு வார்த்தைகள் கொண்ட ஹதீஸ்கள் பல உள்ளன.அவை அத்தனையும் இட்டுக்கட்டப்பட்டவையாகவே அமைந்துள்ளன.இனி கருத்துக்கள் அடிப்படையில் இந்த ஹதீஸ்களை ஆராய்வோம்.
முதல் தவறு:
நபி(ஸல்)அவர்கள் மிகவும் இலக்கியத்தரத்துடன் பேசக்கூடியவரகள்.அவர்களின் ஹதீஸ்களை நாம் ஆராய்நந்தால் அவர்கள் வார்த்தைகளைக் கையாளும் விதமும்,உவமை நயமும் பண்டிதர்களையும் திகைககச்செய்யும் அளவுக்கு உயர்ந்த தரத்தில் அமைந்திருக்கும்.
ஆனால் இந்த ஹதீஸில்(?) காட்டப்பட்டுள்ள உவமையை நோக்கும்போது நபி(ஸல்) அவர்கள் நிச்சயம் இதைச்சொல்லி இருக்கமாட்டார்கள் என்பதை உணர முடியும்.
‘எனது தோழர்கள் நட்சத்திரம் போன்றவர்கள் அவர்களில் எவரைப்பின்பற்றினாலும் நீங்கள் நேர்வழி அடைவீர்கள்’ இந்த வாசகத்தில் நட்சத்திரங்களுடன் ஸஹாபாக்கள் ஒப்பிடப்படுகிறார்கள் அதாவது நட்சத்திரங்களில் எதைப்பின்பற்றினாலும் சரியான திசையை அறிந்துகொள்வது போல் ஸஹாபாக்களில் எவரைப்பின்பற்றினாலும் நேர்வழியடையலாம் என்று உவமை கூறப்பட்டுள்ளது.இந்த உவமை எவ்வித்திலும் சரியானதன்று.ஏனெனில் நட்சத்திரங்களில் ஒரு சில குறிப்பிட்ட நட்சத்திரங்கள் தான் திசைகாட்ட முடியும்.அனைத்து நட்சத்திரங்களும் திசைகாட்டுவதில்லை.எந்த நட்சத்திரத்தைப் பார்த்தாலும் நமக்கு திசைகள் அறிய முடிவதில்லை.
நட்ச்சத்திரங்களில் எதன் மூலமாகவும் திசைகளை அறிவது போல் ஸஹாபாக்களில் எவரைப்பின்பற்றியும் நேர்வழி அடையலாம் என்று கூறப்படும் உவமை பொருத்தமாகப் படவில்லை.
அறிவுக்குப் பொருத்தமற்ற இதுபோன்ற தவறான உவமைகளை நபி(ஸல்) அவர்கள் ஒருபோதும் கூறமாட்டார்கள்.அவர்களின் பல பொன்மொழிகளை நாம் பார்க்கும்போது இதுபோன்ற தவறான உவமைகள் காணப்படவே இல்லை.இதன் காரணமாகவும் இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது என்பதை உணரமுடிகிறது.
இரண்டாவது தவறு:
நபித்தோழர்களில் பல்வேறு தரத்தினர் இருந்துள்ளனர்.செயல்முறைகளிலும்,சிந்தனைகளிலும்,அவர்களுக்கிடையே ஏற்ற தாழ்வு இருந்து இருக்கின்றன.அவர்களின் அந்தஸ்தும் சமமானது அல்ல.பத்ருப்போரில் கலந்து கொண்டவர்களின் நிலையை மற்றவர்கள் அடைய முடியாது.அவர்களிலும் சுவர்கத்தின் நற்செய்தி பெற்ற பத்து நபித்தோழர்களின் நிலையை மற்றவர்கள் அடைய முடியாது.அந்த பத்துப் பேர்களிலும் நாற்பெரும் கலீபாக்களின் நநிலை மிகவும் உயர்ந்தது.நான்கு கலீபாக்களிலும் முதலிருவரின் நிலை பன்மடங்கு மேலானது.அந்த இருவரில் கூட அபூபக்கர்(ரலி)அவர்கள் மிக மிக மேலான தகுதியைப்பெற்றவர்களாவார்கள்.
அல்லாஹ் கூறுகிறான் ‘உங்களில்(மக்கா)வெற்றிக்கு முன்னர் செலவு செய்து போரிட்டவர்களுக்கு உங்களில் எவரும் சமமாகமாட்டார்கள்.(மக்காவின்)வெற்றிக்குப்பினன் செலவு செய்து போரிட்டவர்களைவிட அவர்கள் பதவியால் மிகவும் மகத்தானவர்கள்; எனினும் அல்லாஹ் எல்லோருக்குமே அழகானதையே வாக்களித்திருக்கின்றான்.மேலும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.’(57:10)
நபித்தோழர்களில் இவ்வளவு வேறுபாடு இருக்கும்போது அவர்களில் எவரைப்பினன்பற்றினாலும் நேர்வழி அடையலாம் என்று சொல்லி அனைவரையும் சமநிலையில் வைத்து நபி(ஸல்)அவர்கள் கூறியிருப்பார்களா?
நபித்தோழர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது எந்தக் கருத்தைப் பின்பற்றினாலும் நேர்வழி பெற முடியுமா?கருத்து வேறுபாடு தோன்றும்போது குர்அன்,ஹதீஸ் இவ்விரண்டிலும் உரசிப்பார்க்கும்படித்தானே அல்லாஹ் நமக்கு போதனை செய்கிறான்.எந்தக்கருத்தை வேண்டுமானாலும் பின்பற்றி பலவழி செல்லுங்கள் என்று அல்லாஹ் நமக்கு அனுமதிக்கவில்லையே!
”நம்பிக்கை கொண்டவர்களே!அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்.இன்னும் அல்லாஹ்வின் தூதருக்கும்,உங்களின்(நேர்மையான)அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்.நீங்கள் ஏதாவது விஷயத்தில் தர்க்கம் செய்து கொண்டால் நீங்கள் உண்மையாகவே அல்லாஹ்வையும்,இறுதி நாளையும் நம்பக்கூடியவர்களாக இருந்தால் அவ்விஷயத்தை அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள்.இதுதான் சிறப்பான அழகான விளக்கமாகும்”(4:59)
இந்த திருக்குர்ஆன் வசனத்திற்கு மாற்றமாக யாரை வேண்டுமானாலும் பின்பற்றலாம் என்று எப்படி(நபி)ஸல் சொல்லியிருக்க முடியும்?
இந்த இடத்தில் இமாம் இப்னு ஹஸ்மு அவர்கள் சில கேள்விகளைத் தொகுத்து இந்த ஹதீஸ் பொய்யென நிலை நாட்டுகிறார்கள்.அதை அப்படியே காண்போம்.
அல்லாஹ் தன் நபியைப்பற்றி அந்நஜ்ம் என்ற அத்தியாயத்தில் இவர்தன் மனோ இச்சைப்படி எஎதையும் பேசமாட்டார்.இது இறைவன் மூலமாக அறிவிக்கப்படுகின்ற செய்திகளைத்தவிர வேறெதுவுமில்லை என்று கூறுகிறான்.அதுபோல் அல்லாஹ் தன் வேதத்தைப் பற்றிக்கூறும்போது ‘இது அல்லாஹ் அல்லாத மற்றவர்களிடம் இருந்து வந்திருக்குமானால் இதில் அநேக முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்’என்று அன்னிஸா என்ற அத்தியாயத்தில்82-வது வசனத்தில்)குறிப்பிடுகிறான்.இறைவனிடமிருந்துவந்த இந்தக்குர்ஆனிலும்,இறைச்செய்தியை எடுத்துச்சொன்ன நபி மொழிகளிலும் முரண்பாடுகள் இருக்காது.இருக்கமுடியாது-இருக்கக்கூடாது என்று அல்லாஹ் வலியுறுத்துகின்றான்.
எந்த ஸஹாபியையும் பின்பற்றலாமென்றால் ஒருவிசயத்தில் சிலர் ஹலால் என்றும்,வேறு சிலர் ஹராம் என்றும் கூறியிருக்கும்போது எதையும் பின்பற்றி இரண்டுபிரிவுகளாக நாம் ஆகவேண்டுமா?அவ்வாறு பிளவுபடுவதை அல்லாஹ் அனுமதிப்பானா?மாறாக ‘அல் அன்பால்’ என்ற அத்தியாயத்தில் 46-வது வசனத்தில் பிளவுபடுவதை கண்டிக்கவே செய்கிறான்.
இவ்வாறு பல கருத்துக்கள் நபித்தோளர்களிடம் காணப்படும்போது அல்லாஹ்வின் வேதத்திலும் அவனத தூதரின் பொன் மொழியிலும் உரசிப்பார்த்து எது குர்ஆன் ஹதீஸூக்குப் பொருத்தமானது என்று பார்க்ககும்படித்தான் அல்லாஹ் உத்தரவிடுகிறான்.
இந்த ஹதீஸ் சரியானது என்று வைத்துக்கொண்டால்,மதுபானங்களைவிற்பனை செய்யலாம் என்று ‘சமுரத் இப்னு ஜூன்துப்’ என்ற நபித்தோழர் கூறியுள்ளார்களே!அதைப்பின்பற்றினாலும் நேர்வழி அடைய முடியுமா?இந்தக்கருத்தை குர்அன் ஹதீஸில் உரசிப்பார்க்கக்கூடாதா?
நோன்பு வைத்துக்கொண்டு பனிக்கட்டிகளை சாப்பிடலாம்,ஏனெனில் அது உணவுமல்ல பானமுமல்ல என்று அபூதல்ஹா என்ற நபித் தோழர் கருத்தத் தெரிவித்துள்ளார்களே!அதைப்பின்பற்றி நாம் அவ்வாறு செய்தால் நேர்வழி அடைய முடியுமா?நமது நோன்பு முறியாமல் இருக்குமா?அப்படி யாராவது ஃபத்வா கொடுத்தால் அவர் நேர்வழியில் இருப்பதாக நாம் ஒப்புக்கொள்ள முடியுமா?
இப்படி ஒரு நிலைமையை நபி (ஸல்)அவர்கள் அங்கீகரிப்பார்களா?என்று இப்னு ஹம்ஸ்(ரஹ்)அவர்கள் கூறிவிட்டு இன்னும் ஏராளமான மஸ்அலாக்களில் ஸஹாபாக்களில் ஸஹாபாக்களளின் வேறுபட்ட பல முடிவுகளை வரிசைப்படுத்துகிறார்கள்.(அல் இஹ்காம் பாகம்:2,பக்கம்83)
கருத்து வேறுபாடுகள் தோன்றும் போது எவரை வேண்டுமானாலும் பின்பற்றும் நிலையில் நபி(ஸல்)அவர்கள் நம்மை விட்டுச்செல்லவில்லலை.மாறாக இரண்டை விட்டுச் செல்கிறேன் என்று தான் கூறினார்கள்.அவ்விரண்டையும் பின்பற்றும்வரை தான் வழிதவறவேமாட்டீர்கள் என்றும் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் சரியற்றது என்று நன்றாக தெரிந்தபின்னரும் இது ஹதீஸ்கலை வல்லுனர்களிடத்தில் அது சரியற்றதுதான்.ஆனால் கஷ்பு என்னும் வெளிப்பாடு உடையவர்களிடத்தில் சரியானதுதான் என்ற ஷஃரானி போன்றவர்கள் சரிகாண முயல்வது நபி(ஸல்)அவர்களின் பொன்மொழிகளில் தங்கள் சுயகருத்துக்களை இடம்பெறச்செய்வதாகும்.இது மக்களை திசைதிருப்பும் செயலாகும்.
ஆக இந்த ஹதீஸ் திட்டமிட்டு இட்டுக்கட்டப்பட்டது என்பது சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபணமாகின்றது.ஸஹாபாக்களின் மதிப்பு,அவர்களுக்கு மறுமையில் கிடைக்கும் அந்தஸ்து என்பது வேறு.அவர்களில் எவரையும் ஆராயாமல் பின்பற்றலாம் என்பது வேறு.இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இதுபோன்ற இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களைக் கூறுவோருக்கு நபி(ஸல்)அவர்களின் வன்மையான எச்சரிக்ககையை நினைவுபடுத்துகிறோம்.
‘எவன் என்மீது இட்டுக்கட்டிச் சொல்வானோ அவன் தனது தங்கமிடத்தை நரகமாக்கிக் கொள்ளட்டும்’ஆதாரம்:புஹாரி)
இது சரியற்ற ஹதீஸ் என்று தெளிவாக விளக்கப்பட்ட பின்னரும் இந்த ஹதீஸ் மேடைகளில் சொல்லப்படுமானால் அதைச் சொல்லுகின்றவர்களை அணுகி தக்க ஆதாரங்களை கேட்பது பொதுமக்கள் கடமையாகும்.
நபி(ஸல்)அவர்களுடைய எச்சரிக்கையை மதித்து பொய்களை களைந்து,நரகத்திற்குச் செல்வதிலிருந்து மீட்சிபெற்று ஜன்னத்திற்கு செல்வோமாக!ஆமீன்..
(தொடரும் இன்ஷாஅல்லாஹ்………..)
படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கி..
உரை:உஸ்மான்கான்(ENGLISH)JAQH மாநில மாநாடு படைப்புகளை விட்டு படைத்தவனை...
படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கி.
அஸ்க்கர் அலி மஹதிJAQH மாநில மாநாடு: படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கி....
படைத்தவன் ஒன்றா?இரண்டா?
:அப்துல்காதிர்உமரிJAQH மாநில மாநாடு: படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கிஇறைவன் ஒருவனா?அல்லது...
படைத்தவனின் சாபம்
அப்துல் மஜீத் மஹ்லரிJAQH மாநிலமாநாட்டுவீடியோபடைத்தவனின்சாபம் நம்மீதுவராமல் நம்மை...
படைப்புகளின்நோக்கம்
உமர்அலிஃபிர்தவ்ஸிJAQH மாநிலமாநாட்டுவீடியோஇறைவன் இந்தபூமியில் படைப்புகளை...
படைத்தவனுக்கு இடைத்தரகர்கள் வேண்டுமா?
அப்துற்றஹ்மான் மன்பஈJAQHமாநிலமாநாட்டுவீடியோபடைத்தவனுக்கு...
படைத்தவனை அறிந்துகொள்ளுங்கள்
முஹம்மது ஷ.பி JAQH மாநிலமாநாட்டுவீடியோஇறைவனை நாம் எவ்வாறு...
Copyright � ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்