Wednesday, 09-July-2025
கிரிக்கெட்டும் மனித சூதாட்டமும்

காஜா முஹிய்யுத்தீன் ஃபிர்தௌஸி

 

உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை, பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும், நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?

அல்குர்ஆன் 6:32

 

விளையாட்டைக்குறிக்கும் SPORT என்ற ஆங்கிலச் சொல்லிற்கு OXFORD அகராதியில் NOT SERIOUSLY (முக்கியத்துவ மில்லாமல்)என்று பொருள் காணப்படுகிறது ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் விளையாடும் வீரர்களும் பார்க்கும் ரசிகர்களும் வெறி கொண்ட வர்களாக இருப்பதைப் பார்க்க முடிகின்றது இன்று உலகமெங்கும் கண்மூடித்தனமாகப் பின்பற்றப்படும் ஒரு விளையாட்டு கிரிக்கெட் ஆகும்.

 

இங்கிலாந்தில் குளிர் காலத்தில் குளிரைப்போக்கி உடலை சூடேற்றுவதற்காக ஒருவர் ஒரு பொருளைப் போடுவார் அதை மற்றொருவர் தட்டி விளையாடுவார் இது தான் காலப்போக்கில் கிரக்கெட் என்று சொல்லப்படுகிறது. குளிரைப் போக்குவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட விளையாட்டு தற்போது முட்டாள் தனமாக சுட்டெரிக்கும் வெயிலில் மட்டை தட்டுகின்ற விளையாட்டாக மாறியிருக்கிறது.

 

சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் மூதறிஞர் ஒருவர் (ஜார்ஜ் பெர்னாட்ஷா) இவ்வாறு சொன்னார் “11 முட்டாள்கள் விளையாடுவதை 11 ஆயிரம் முட்டாள்கள் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்” என்று. அந்த அளவிற்கு எவ்வித பயனற்ற ஒரு விளையாட்டு தான் கிரக்கெட் என்பது.

 

பெர்னாட்ஷா கூறியது என்னவோ இன்று நிதர்சனமாக நடந்து கொண்டிருக்கிறது பார்வையாளர் வீதம் 11 ஆயிரம் என்பது இன்று இலட்சம் மடங்காவது அதிகமாகி இருக்கும் அதாவது கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வம் காட்டுகின்றவர்கள் குறைவுதான். ஆனால் இதை ஒரு சூதாட்டம் போல் வெறியோடு பார்த்துக் கொண்டிருப்பவர்களின் கூட்டத்திற்கு அளவே இல்லை எனலாம் இவ்விளையாட்டை பார்ப்போருக்கு உடல் ஆரோக்கியமோ, பண வரவோ, வேறு எந்தப்பலனுமோ கிடைப்பதில்லை.

 

ஆடக்கூடியவர்களுக்கும், அவர்களை வைத்து விளம்பரம் செய்யக்கூடியவர்களுக்கும் தான் எல்லாவித பலனும், இலாபமும் ஏற்படுகிறதே தவிர நாட்டிற்கோ, நாட்டு மக்களுக்கோ, அரசாங்கத்திற்கோ எவ்வித பிரயோஜனமும் ஏற்படப்போவதில்லை.

 

மாறாக வெறியுணர்வு கிரிக்கெட் விளையாட்டின் ரசிகர்களிடத்தில் மிகைத்துக் காணப்படுகிறது இந்தியாவும் பாகிஸ்தானும் ஆடினால் சொல்லவேண்டிய அவசியமேயில்லை இரு நாடுகளுக்கும் இடையில் போர் நடப்பது போலவே சித்தரிக்கப்படுகிறது ஏதாவது ஒரு நாட்டு வீரர்கள் தோற்றுவிட்டால் அவர்களின் ரசிகர்கள் அவர்களை கேவலப்படுத்துவதும் அவர்களின் உருவபொம்மைகளை எரிப்பதும் அவர்களின் இல்லங்களை சேதப்படுத்துவதும் வெறித்தனமாக நடந்து கொண்டிருக்கிறது.

 

இங்குள்ள சிலர் பாகிஸ்தான் ஜெயித்துவிட்டால்; பட்டாசு வெடிப்பதும் இனிப்பு வழங்குதும் அது போன்று இந்தியா ஜெயித்து விட்டால்; இந்து மத வெறியர்கள் பட்டாசு வெடிப்பதும் இனிப்பு வழங்குதும் வெறித்தனத்தின் உச்சகட்டம் என்று சொல்லலாம்.

 

மேலும் தங்கள் நாடு தான் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக ஒரு பிரிவினர் கோவில்களில் பேட், ஸ்டம்பு, பந்து இவைகளை வைத்து பூஜைகள் செய்வதும் மற்றொரு பிரிவினர் தர்ஹாக்களில் பிரார்த்தனை செய்து ஃபாத்திஹா ஓதுவதும் மடத்தனத்தின் எல்லை என்று சொல்லலாம்.

 

ஓவ்வொரு வருடமும் IPL லில் கிரிக்கெட் வீரர்கள் மனித சூதாட்டத்திற்கு ஆளாகிறார்கள். ஒவ்வொரு வீரரையும் பல கோடிக்கணக்கில் பல விளம்பர நிறுவனங்களும், பல தொழிலதிபர்களும் ஏலம் எடுப்பதை கண்கூடாகக் கண்டுவருகிறோம்.

 

கடந்த IPL லில் லலித் மோடி மகா ஊழலில் சிக்கி தற்போது வெளிநாட்டில் சொகுசாக வாழ்ந்து வருகிறார் என்பது வேதனைக்குறிய விஷயம் கிரிக்கெட் ரசிகர்கள் தான் ஐயோ பாவம்.

 

உலகக்கோப்பை போட்டிகளில் கூட பல நாடுகளைச் சார்ந்த பல வீரர்கள் மேட்ச் பிக்சிங் என்று சொல்லப்படக்கூடிய சூதாட்டத்தில் ஈடுபட்டு கையும் களவுமாக பிடிபட்டு விளையாட்டிலிருந்தே தூக்கி எறியப்பட்ட தகவல்களை நாம் கேள்விப்படுகிறோம் அதற்கென்று பல சூதாட்டத்தரகர்களும் வேலை செய்வதை நாம் பார்க்கின்றோம்

 

தற்போது உள்ள HOT NEWS IPL சூதாட்டம்

நடந்து கொண்டிருக்கும் IPL லில் கூட சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரர்கள் கையும் களவுமாக பிடிபட்டதை கண்கூடாகக் கண்டுவருகிறோம் இன்னும் பல வீரர்களுக்கு சூதாட்டத்தில் தொடர்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் எவ்வாறு சூதாட்டத்தில் ஈடுபட்டார்கள் என்பதை பத்திரிக்கைள் தொலைக்காட்சி நிறுவனங்கள் தோலுரித்துக் காட்டுகின்றன தங்கள் அணி தான் ஜெயிக்கும் என்று நம்பிக்கையோடு இருக்கும் ரசிகர்களுக்கு வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டு எதிரணிக்கு அதிக ரன்களை விட்டுக் கொடுத்து ரசிகர்களின் நம்பிக்கையில் மண்ணை அள்ளிப்போடுவது எவ்விதத்தில் நியாயம் என்பதை நடுநிலையாளர்கள் சிந்திக்கவேண்டும் தங்களின் பணங்களை வீணடித்து ஏமாந்து போகிறார்கள் ரசிகர்கள் என்பது தான் உண்மை.

 

சூதாட்டத்தில் ஈடுபட்ட விரர்களுக்கு கடுமையான தண்டனையும் விளையாட்டிலிருந்தே அப்புறப்படுத்தவேண்டும் எனவும் கண்டனக்கனைகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

 

இது தெரியாத அப்பாவி ரசிகர்கள் தங்களின் பொண்ணான நேரங்களை வீணடித்து தங்களின் அலுவல்களை விட்டு விட்டு அவர்கள் ஃபோர் சிக்ஸர் அடிக்கும் போது கரங்களைத் தட்டுவதிலும் அவர்களை உற்சாகப்படுத்துவதிலும் கழித்துக் கொண்டிருக்கின்றனர் அதனால் தங்களுக்கு என்ன லாபம் என்பதை சிந்தித்துப் பார்த்தார்களா?

 

சூதாட்டத்தை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது

சூதாட்டத்தின் மூலம் ஷைத்தான் மக்களுக்கு மத்தியில் பகைமைத் தீயையும் வெறுப்புணர்வையும் தான் உண்டாக்குகிறான் என்பதை சமீபத்திய சூதாட்ட நிகழ்வுகள் நமக்கு படம் பிடித்துக் காட்டுகின்றன.

 

ஈமான் கொண்டோரே! மதுபானமும் சூதாட்டமும் கற்சிலைகளை வழிபடுதலும் அம்புகள் எறிந்து குறி கேட்பதும் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும், ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் வெற்றி யடைவீர்கள்.

 

நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம் மதுபானத்தைக் கொண்டும் சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும் வெறுப்பையும் உண்டு பண்ணி அல்;லாஹ்வின் நினைவிலிருந்தும் தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்,எனவே அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ளமாட்டீர்களா?

அல்குர்ஆன் 5: 90, 91.

 

ஆபாசத்தின் உச்சகட்டம்

பொதுவாகவே இஸ்லாம் ஆபாசத்தை கடுமையாக எச்சரிக்கை செய்கிறது. ஆபாசம்தான் எல்லாத் தீமைகளுக்கும் ஆணி வேராக இருக்கின்றது அது விளையாட்டிலும் புகுந்து விட்டது என்பது வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது. குறிப்பாக ஐ பி எல் கிரிக்கெட்டிலும் (சியர்ஸ் கேர்ள்ஸ்) நடன மங்கைகளின் அரை குறை ஆடையோடு ஆடும் நடனங்கள் பார்வையாளர்களை உள்ளம் கூச வைக்கிறது. ஆடை என்பது மானத்தை மறைப்பதாக இருக்கவேண்டும் ஆனால் இன்று மானம் காற்றில் பறக்கிற அளவிற்கு ஆடைகள் இருக்கின்றன .

 

ஆதமுடைய மக்களே! மெய்யாகவே நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும் உங்களுக்கு அலங்காரமாகவும் ஆடையை அளித்துள்ளோம். ஆயினும் தக்வா (பயபக்தி) எனும் ஆடையே (அதை விட) மேலானது. இது அல்;லாஹ்வுடைய (அருளின்) அடையாளங்களில் (ஒன்றாக) உள்ளதாகும் – (இதைக் கொண்டு) நல்லுணர்வு பெறுவீர்களாக. அல்குர்ஆன் 7:26.

 

பெண்களிடத்தில் இயல்பாகவே இருக்கின்ற வெட்கம், நாணம் அகன்று விட்டது அதனால் தான் இது போன்ற அசிங்கங்கள் ஒழுக்கக் கேடுகள் விளையாட்டிலும் அரங்கேறுகின்றன.

 

நாணம் என்பது இறைநம்பிக்கையில் ஓரம்சம்

நபி(ஸல்) அவர்கள் (அன்சாரிகளில்) ஒருவரைக் கடந்து சென்றார்கள். அவர் வெட்கப்படுவது தொடர்பாகத் தம் சகோதரரைக் கண்டித்துக் கொண்டிருந்தார். “நீ (அதிகமாக) வெட்கப்படுகிறாய் (இதனால் உனக்கு வரவேண்டிய நன்மைகள் பாதிக்கப்படுகின்றன) வெட்கத்தால் உனக்கு நஷ்டம் தான்” என்பது போல் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது இறைத் தூதர் (ஸல்) அவர்கள், “அவரைவிட்டுவிடு! நாணம் இறை நம்பிக்கையில் அடங்கும்” என்றார்கள்.

புகாரி 6118.

 

நபி(ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணைவிடவும் அதிகக் கூச்ச சுபாவம் உள்ளவர்களாய் இருந்தார்கள். அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

புகாரி 6119

 

மக்கள் முந்தைய இறைத்தூதர்களின் (முது) மொழிகளிலிருந்து அடைந்து கொண்ட ஒன்றுதான். “உனக்கு நாணம் இல்லையேல் நாடியதைச் செய்துகொள்” என்பதும்.” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூ மஸ்ஊத் உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்.

புகாரி 2484,6120.

 

நேர,கால விரயம்

காலம் பொன் போன்றது என்பார்கள் அது வீணாகக் கழிவது கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களில் தான் நேரத்தையும் காலத்தையும் வீணாகக் கழிப்பது இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டிருக்கின்ற எந்த முஸ்லிமுக்கும் ஆகுமானதல்ல. இறைவனிடத்தில் அதற்குப் பதில் சொல்லியே தீர வேண்டும்

உன் ஆயுள், இளமை, ஈட்டிய சம்பாத்தியம், அதை செலவழித்தது, கொடுக்கப்பட்ட அறிவு இவைகளுக்கு நாளை மறுமையில் பதில் சொல்லாத வரை தான் நிற்கும் இடத்தை விட்டும் நகர முடியாது என நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள் (திர்மிதீ)

 

ஆக நேர காலங்களை நல்ல ஆரோக்கிமான பல பயனுள்ள விளையாட்டுக்களிலும் பல பயனுள்ள வழிகளிலும் கழிக்க முன்வரவேண்டும்.

 

விளையாட்டு என்பது எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை இஸ்லாம் நமக்கு வரையறுத்துத் தருகிறது

ஓட்டப்பந்தயம், அம்பு எறிதல், மல்யுத்தம், குதிரை ஏற்றம், வாள் வீச்சு போன்ற பல தற்காப்புப்பயிற்சிகளை கற்றுக்கொள்ள வலியுறுத்துகிற அதே நேரத்தில் சோம்பேறிகளாக கோழைகளாக இருப்பதை வெறுக்கிறது வீரர்களாக இருக்க வலியுறுத்துகிறது இஸ்லாம்.

 

விளையாட்டிற்கு முக்கியத்துவமில்லாமல் என்ற பொருள் இருந்தாலும் இஸ்லாம் விளையாட்டை முக்கியத்துவமாகத் தான் பார்க்கிறது.

 

பலவீனமான மூஃமினை விட பலம் வாய்ந்த மூஃமின் தான் அல்லாஹ்விற்கு பிரியத்திற்குறியவனாகவும் அல்லாஹ்விடத்தில் சிறந்தவனாகவும் இருக்கிறான் என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் (முஸ்லிம்).

 

அன்று ஈத் (பெருநாள்) தினமாக இருந்தது. (ஆப்பிரிக்கக்) கருப்பர்கள் தோல் கேடயத்தாலும் ஈட்டிகளாலும் (வீர விளையாட்டு) விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதரிடம் நான் (விளையாட்டைப் பார்க்க அனுமதி) கேட்டிருக்க வேண்டும் அல்லது அவர்களே என்னிடம், “நீ இவர்களுடைய (வீர விiளாயட்டைப்) பார்க்க விரும்புகிறாயா?” என்று கேட்டிருக்க வேண்டும். நான், “ஆம்” என்று பதிலளித்தேன். உடனே, அவர்கள் என் கன்னம் அவர்களின் கன்னத்தின் மீது ஒட்டியபடி இருக்க, என்னைத் தமக்குப் பின்னால் நிற்க வைத்தார்கள். “அர்ஃபிதாவின் மக்களே! (எத்தியோப்பியர்களே!) விளையாட்டைத் தொடருங்கள்” என்று கூறினார்கள். இறுதியில் நான் (விளையாட்டை நன்கு ரசித்து) சலிப்புற்றுவிட்டபோது, “போதுமா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க நான், “ஆம், போதும்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “அப்படியானால் நீ போ!” என்று கூறினார்கள் என ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்.

புகாரி 2901, 2907, 3530, 5236.

 

ஒரு பெருநாளின்போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபி (ஸல்) அவர்கள் தாமாகவோ, நான் கேட்டதற்காகவோ “நீ பார்க்க ஆசைப் படுகிறாயா?” எனக் கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்கவைத்தனர். (பிறகு அவர்களை நோக்கி) “அர்பிதாவன் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள்’”

 

என்று கூறினார்கள். நான் பார்த்துச் சலித்தபோது “உனக்குப் போதுமா?” என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். “அப்படியானால் (உள்ளே) போ!” என்று கூறினார்கள்.ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

புகாரி 950.

 

பந்தயம் நடத்தப்பட்டிருக்கிறது நபியவர்கள் காலத்தில்

ஒருமுறை நபியவர்களுக்கும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்கும் இடையே ஓட்டப்பந்தயம் நடக்க முதல் முறை அன்னை ஆயிஷா அவர்கள் ஜெயிக்க இரண்டாவது முறை ஆயிஷா அவர்கள் சற்று குண்டானதால் நபியவர்கள் ஜெயித்து விடுகிறார்கள் (ஹதீஸின் கருத்து)

 

நபி(ஸல்) அவர்களிடம் ‘அள்பா’ என்று அழைக்கப்பட்ட ஒட்டகம் ஒன்று இருந்தது. அது பந்தயத்தில் எவரும் அதை முந்த முடியாத (அளவுக்கு விரைவாக ஓடக் கூடிய) தாக இருந்தது. அப்போது கிராமவாசி ஒருவர் ஆறு வயதுக்குட்பட்ட ஒட்டகம் ஒன்றின் மீது வந்தார். அது நபி(ஸல்) அவர்களின் ஒட்டகத்தை முந்தியது. இது முஸ்லிம்களுக்கு மனவேதனையை அளித்தது. இதையறிந்தபோது நபி (ஸல்) அவர்கள், “உலகில் உயர்ந்து விடுகிற பொருள் எதுவாயினும் (ஒருநாள்) அதைக் கீழே கொண்டு வருவதே அல்லாஹ்வின் நியதியாகும்” என்று கூறினார்கள். அனஸ் (ரலி) அறிவித்தார்.

புகாரி 2872, 6501.

 

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மெலிய வைக்கப்படாத (பயிற்சி பெறாத) குதிரைகளுக்கிடையே பந்தயம் வைத்தார்கள். அவற்றின் (பந்தய) தூரம் ‘சனிய்யத்துல் வதா’ விலிருந்து பனூ ஸுரைக் குலத்தாரின் பள்ளிவாசல் வரை(யுள்ள தொலைவாக) இருந்தது. நானும் இத்தகைய குதிரைகளுக்கிடையேயான பந்தயங்களில் கலந்து கொள்வேன். அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

புகாரி 2869.

 

மெலிய வைக்கப்பட்ட குதிரைகளுக்கான பந்தய தூரம்

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மெலிய வைக்கப்பட்ட (பயிற்சி அளிக்கப்பட்ட) குதிரைகளுக்கிடையே பந்தயம் வைத்தார்கள். அவற்றை ‘ஹஃப்யா’ விலிருந்து அனுப்பினார்கள். அவற்றின் (பந்தய) எல்லை ‘சனிய்யத்துல் வதா’வாக இருந்தது”என்று இப்னு உமர்(ரலி) கூறினார்.

 

நான் (அறிவிப்பாளர்) மூஸா இப்னு உக்பா(ரஹ்) அவர்களிடம், ‘அவ்விரண்டுக்குமிடையே எவ்வளவு தொலைவிலிருந்தது?’ என்று கேட்டேன். அவர், “ஆறு அல்லது ஏழு மைல்கள் தொலைவிலிருந்து” என்று பதிலளித்தார் என (மற்றோர் அறிவிப்பாளரான) அபூ இஸ்ஹாக்(ரஹ்) கூறினார்.

புகாரி 2870.

 

விளையாட்டில் நோக்கம் இருக்கவேண்டும். எதிரியை வீழ்த்த வேண்டும் வேட்டைப் பிராணியை கொல்லவும் வேண்டும் அதல்லாத உடலுக்கு தீங்கு தருகின்ற பார்வையை பறிக்கின்ற பல்லை உடைக்கின்ற எந்த விளையாட்டையும் இஸ்லாம் தடை செய்கிறது. கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களும் அதுபோன்றதுதான்; அது எதிரியை வீழ்த்தாது வேட்டைப் பிராணியைக் கொல்லாது.

 

தடைசெய்யப்பட்ட விளையாட்டுக்களைப்பற்றி நபியவர்கள் கூறும் போது பின்வருமாறு கூறுகிறார்கள்

 

கல்சுண்டு விளையாட்டிற்கு (‘கத்ஃப்’) நபி(ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள். மேலும் நபி(ஸல்) அவர்கள், “அது வேட்டைப் பிராணியையும் கொல்லாது; எதிரியையும் வீழ்த்தாது. மாறாக, அது கண்ணைப் பறித்து விடும் பல்லை உடைத்துவிடும்” என்றார்கள்.

புகாரி 6220, 255.

 

நான் சிறு கற்களை எறிந்து (வேட்டையாடிக்) கொண்டிருந்த ஒரு மனிதரைக் கண்டேன்.அவரிடம், “சிறு கற்களை எறியாதே. ஏனெனில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சிறு கற்களை எறிய வேண்டாமென்று தடுத்தார்கள்” அல்லது “சிறுகற்களை எறிவதை வெறுத்து வந்தார்கள்”. மேலும், நபி அவர்கள் “அவ்வாறு சிறு கற்களை எறிவதால் எந்தப் பிராணியும் வேட்டையாடப்படாது; எந்த எதிரியும் வீழ்த்தப்படமாட்டான். மாறாக, அது பல்லை உடைக்கலாம் கண்ணைப் பறித்து விடலாம். (அவ்வளவுதான் அதனால் முடியும்)’என்று கூறினார்கள்” எனக் கூறினேன். அதன் பிறகு ஒரு முறை அதே மனிதர் சிறு கற்களை எறிந்துகொண்டிருப்பதைக் கண்டேன். அவரிடம், “இறைத்தூதர்(ஸல்) அவர்கள் “சிறு கற்கள் எறிவதைத் தடை செய்தார்கள்” அல்லது “சிறு கற்கள் எறிவதை வெறுத்தார்கள்” என்று நான் உனக்குச் சொல்கிறேன். ஆனால், நீயோ (அதை அலட்சியம் செய்துவிட்டு) சிறு கற்களை எறிகிறாயே? நான் உன்னிடம் இவ்வளவு இவ்வளவு காலம் பேசமாட்டேன்” என்று சொன்னேன் என்று அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல்(ரலி) கூறினார்.

புகாரி 5479.

 

தங்களைத் தற்காத்துக் கொள்கின்ற எதிரிகளைத் தாக்குகின்ற எந்த ஒரு விளையாட்டாக இருந்தாலும் அதை இஸ்லாம் அங்கீகரிக்கிறது

 

அல்லாஹ் கூறுகிறான்:

மேலும், அவர்களை எதிர்ப்பதற்காக உங்களால் முடிந்த அளவு வலிமையையும் தயார் நிலையிலுள்ள குதிரைப் படையையும் திரட்டி வையுங்கள். அவற்றின் வாயிலாக, நீங்கள் அல்லாஹ்வின் பகைவர்களையும் உங்கள் பகைவர்களையும் பீதிக்குள்ளாக்கலாம். அல்குர்ஆன் 8:60

 

பனூ அஸ்லம் குலத்தார் சிலர் அம்பெய்யும் போட்டியில் ஈடுபட்டிருந்த போது நபி(ஸல்)அவர்கள் அவர்களைக் கடந்து சென்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், “இஸ்மாயீலின் சந்ததிகளே! அம்பெய்யுங்கள். ஏனெனில், உங்கள் தந்தை (இஸ்மாயீல் (அலை) அவர்கள்) அம்பெய்வதில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார்கள். நீங்கள் அம்பெய்யுங்கள். (போட்டியில்) நான் இன்ன குலத்தாருடன் இருக்கிறேன்” என்று கூறினார்கள். உடனே, இரண்டு பிரிவினரில் ஒரு சாரார் அம்பெய்வதை நிறுத்தினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், “உங்களுக்கென்ன ஆயிற்று? ஏன் அம்பெய்யாமலிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “தாங்கள் அவர்களுடன் (எதிர் தரப்பினருடன்) இருக்க, நாங்கள் எப்படி அம்பெய்வோம்?” என்றார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள், “அப்படியானால் நான் உங்கள் அனைவருடனும் இருக்கிறேன். நீங்கள் அம்பெய்யுங்கள்” என்று கூறினார்கள்.ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார்.

புகாரி 2899.

 

இப்படி ஆபாசம், சூதாட்டம், நேர கால விரயம், போன்றவற்றின் ஊற்றுக்கண்ணாக இருக்கின்ற வணக்கவழிபாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்துகின்ற கிரிக்கெட் செஸ் போன்ற எந்த விளையாட்டையும் இஸ்லாம் ஏற்றுக் கொள்ளாது மாறாக அவற்றை தடை செய்கிறது.

 

இதுபோன்ற விளையாட்டுக்களில் காலத்தை வீணடிக்காமல் பல பயனுள்ள ஆரேக்கியமான மனதுக்கு இதமளிக்கிற மார்க்கத்திற்கு வணக்கவழிபாடுகளுக்கு ஊறுவிளைவிக்காத வீரவிளையாட்டுக்களை தேர்ந்தெடுத்து அதில் கவனம் செலுத்தவேண்டும்.

 

ஆக்கம்:

காஜா முஹிய்யுத்தீன் ஃபிர்தௌஸி,

பேராசிரியர் JFA கல்லூரி (Al- Jamiathul Firdhousiya Arabic College)

தொடர்புக்கு:9894896579

செய்திகள்

View All

கட்டுரைகள்

JAQH - MASJIDS

View All
Nagercoil
9443283659

masjithussalamath Hawwanager

ERAVIPUTOORKADAI
8300165201

JAQH MARKAZ ERAVIPUTOORKADAI

Nagercoil
9443453943

Al JAMIYYATHUL FIRTHOSIYA ARABIC COLAGE

AYYASAMI STREET
442852834

JAQH HED OFFICE MASJITH SALAM

Kottar,Nagercoil
7373364653

JAQH-Tawheed Masjith,Firthousiya Nager

MADURI
9965110241

JAQH MARKAZ THIRUMANGALAM MADURAI

JAQH

jamiyyathu Ahlil Qur'an Val Hadees

Head Office

jamiyyathu Ahlil Qur'an Val Hadees

61/26, Iyyasami St, Pudupet,
Komaleeswaranpet, Egmore,
Chennai, Tamil Nadu 600002
Phone: +91 44 2852 8343

Quick Links

Copyright © jaqh.org. All Rights Reserved. Designed by Zeentech Solutions