Monday, 07-October-2024
முட்டாள்கள்_தினமும்_இஸ்லாம்_கூறும்_தீர்வுகளும்...

பிறர் மனம் புண்படும்படி கிண்டல் அடிப்பதையோ, பரிகாசம் செய்வதையோ, ஏமாற்றுவதையோ எச்சரிக்கும் வகையில் எழுதப்பட்ட ஆக்கம்

உலகம் முழுவதும் "ஏப்ரல் 1"சர்வதேச முட்டாள்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் ஒருவர் மற்றொருவரை ஏமாற்றுவதும்,கிண்டலடிப்பதும், முட்டாள்களாக ஆக்க நினைப்பதும்,நடக்காத ஒன்றை நடந்ததாகச் சொல்வதும்,மற்றவர்களை ஏமாற்றி அதிர்ச்சிக்குள்ளாக்குவதும், நக்கலடிப்பதும்,பரிகாசம்செய்வதும்,கேலி செய்வதும் வாடிக்கையாக உலகம் முழுவதும் நடந்தேறிக்கொண்டிருக்கிறது.

முட்டாள்கள் தினம் உருவானதற்கான பல கட்டுக்கதைகளும்,கற்பனைக்கதைகளும் சொல்லப்படுவதுண்டு.

அவற்றில் சிலவற்றைப் பார்த்து விட்டு உண்மையான வரலாற்றைப் பார்ப்போம்:

1:ரோமர்களின் மூடநம்பிக்கையின்படி "புளூட்டோ" என்ற கடவுள் "பிராஸர்பினா" என்ற யுவதியைக் கீழ் உலகிற்கு கடத்திச் சென்றதாகவும்,அவள் அழுது தன் தாயை உதவிக்கு அழைத்தாகவும்,அவள் தாயோ அவளின் அழுகை சப்தத்தைக் கேட்டு இல்லாத இடத்தில் தேடியதாகவும் இந்தத் தவறான தேடுதலே முட்டாள்கள் தினம் உருவாகக் காரணம் எனவும் சொல்லப்படுகிறது.

2:பைபிளின்படி நோவா(நூஹ்(அலை))தான் முதல் முட்டாள் எனச்சொல்லப்படுகிறது.(நவூதுபில்லாஹ்)

காரணம் வெள்ளப்பிரளயம் ஏற்பட்டு பூமி காய்வதற்கு முன்னால் நோவா ஒரு புறாவை அனுப்பி காய்ந்த,வறண்ட நிலத்தை தேடச் சொல்கிறார்.ஈரமான பூமியில் காய்ந்த நிலம் எங்கே இருக்கும்?அதனால் தான் அவர் ஒரு முட்டாள் என்றும் அதை மையமாக வைத்தே முட்டாள்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது எனவும் சொல்லப்படுகிறது.

3:13 ஆம் நூற்றாண்டில் பிரிட்டஷில் வாழ்ந்த "ஜான்" என்ற மன்னர் எங்கே படையெடுத்துச் சென்றாலும் அந்தப்பகுதி "பொதுச்சொத்தாக” ஆக்கப்பட்டுவிடும். "கௌதம்" என்ற பகுதியில் "நாட்டிங்கம்ஷைர்" என்ற ஊருக்குள் அவர் படையெடுத்து வரும்போது அவ்வூர்வாசிகள் தங்களின் ஊரை மன்னர் அபகரித்துவிடக்கூடாது என்பதற்காக அவர்களை முட்டாள்களாக ஆக்க நினைத்து தண்ணீரில் நீந்துகின்ற மீனைப்பிடித்து தரையில் விடுவதும் பிறகு மீண்டும் நீரில் விடுவதுமான பல முட்டாள்தனமான காரியங்களைச் செய்கின்றனர். அவர்களின் முட்டாள்தனங்களைக்கண்ட மன்னர் அவர்களைத் தண்டிக்கிறார்.

இது தான் ஏப்ரல் 1 அன்று முட்டாள்கள் தினம் உருவாகக் காரணம் எனச்சொல்லப்படுகிறது.

இன்னும் இவை போன்ற பல கற்பனைக் கதைகளும் புராணக்கதைகளும் சொல்லப்படுவதுண்டு.

உண்மையான வரலாற்றுப்பிண்ணனி.....

காலண்டர் மாற்றமே முட்டாள்கள் தினம் உருவாக முக்கியக் காரணம்.

அதாவது கி.பி.1582 வரை ஃபிரான்ஸில் ஏப்ரல் மாதம் தான் ஆண்டின் முதல் மாதமாகவும்,மார்ச் மாதம் ஆண்டின் இறுதியாகவும், மார்ச் 25 ல் இருந்து ஏப்ரல் 1 வரை புத்தாண்டுக் கொண்டாட் டங்களும் உலகம் முழுவதும் நடைபெற்று வந்தன.

‘'கிரிகோரி”என்கிற போப் தான் இன்று நடைமுறையில் இருக்கின்ற ஆங்கிலக் காலண்டரை உருவாக்கியவர்.அதாவது ஜனவரியை ஆண்டின் முதல் மாதமாகவும் டிசம்பரை ஆண்டின் இறுதி மாதமாகவும் வைத்து உருவாக்கப்பட்ட இந்தக் காலண்டரை பலர் ஏற்றுக்கொண்டனர்.இன்னும் சிலர் பழைய காலண்டர் முறையையே பின்பற்றி வந்தனர்.

புதிய காலண்டர் முறைப்படி மாறியவர்கள் பழைய காலண்டர் முறையைப் பின்பற்றி நடப்பவர்களை முட்டாள்கள் என கேலி பேசவும்,கிண்டலடிக்கவும் ஆரம்பித்தனர்.இதுவே நாளடைவில் ஏப்ரல் 1 அன்று முட்டாள்கள் தினம் அனுசரிக்கக் காரணமாக அமைந்து விட்டது.

ஃபிரான்ஸிலிருந்து லண்டன்,அமெரிக்கா, மெக்ஸிகோ, ஸ்காட்லாந்து,இங்கிலாந்து, கரீபியன்,ஜமைக்கா,கானா போன்ற நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்து இன்று உலகம் முழுவதிலும் உள்ள பல நாடுகளுக்கும் பரவி இருக்கிறது.

ஏப்ரல் ஒன்றைக்குறித்து தவறான கருத்து:

இன்று முஸ்லிம்களிடத்தில் ஒரு தவறான கருத்து பரவலாக பரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது.அதாவது ஸ்பெயினிலிருந்து ஒட்டு மொத்த முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களின் சூழ்ச்சியினாலும் சதித்திட்டத்தினாலும் ஸ்பெயினை விட்டு வெளியேற்றப்பட்டனர்.இதன் காரணமாக கிறிஸ்தவர்கள் தான் முஸ்லிம்களை முட்டாள்களாக்க இந்த தினத்தை உருவாக்கினார்கள் என்று முஸலிம்களே தவறாக விளங்கிக் கொண்டு, அந்த தினத்தை நாம் ஆதரிக்கக்கூடாது என்று பரப்பிவருகின்றனர்.மேற்கூறப்பட்ட காலண்டர் மாற்றமே முட்டாள்கள் தினம் உருவாக முக்கியக்காரணம் என்பதை முஸ்லிம்கள் முதலில் விளங்க வேண்டும்.

இஸ்லாம் இந்த முட்டாள்கள் தினத்தை எவ்வாறு பார்க்கிறது?

1.ஒருவர் மற்றொருவரைக் கிண்டலடிப்பதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.

‘'முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறிதொரு சமூகத்தாரைப் பரிகாசம்செய்ய வேண்டாம் ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்) அவர் களை விட மேலானவர்களாக இருக்கலாம், (அவ்வாறே) எந்தப் பெண்களும் மற்ற எந்த பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) - ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்”.

(அல்குர்ஆன் 49:11)

2.ஒருவர் மற்றொருவரை ஏமாற்றுவதை இஸ்லாம் கடுமையாக எச்சரிக்கை செய்கிறது.

அளவு நிறுவையில் ஏமாற்றி மோசடி செய்த மத்யன் என்ற ஊர்வாசிகள் அழிக்கப்பட்டதை குர்ஆன் இவ்வாறு கூறுகிறது.

அளவு (எடையில்) மோசம் செய்பவர்களுக்குக் கேடு தான்.(அல்குர்ஆன்83:1)

ஆகவே அவர்களை பூகம்பம் பிடித்துக் கொண்டது, அதனால்

அவர்கள் (காலையில்) தம் வீடுகளில் இறந்தழிந்து கிடந்தனர். ஷ{ஐபை பொய்ப்பித்தவர்கள் தம் வீடுகளில் (ஒரு பொழுதும்) வாழ்ந்திராதவர்களைப் போல் ஆகிவிட்டனர்.

(அல்குர்ஆன் 7:91,92 / 11:94 / 29:36)

நபி(ஸல்)அவர்கள் கடைத்தெருவில் உள்ள ஓர் உணவுக் குவியலைக் கடந்து சென்றார்கள்.அப்போது அதனுள் தமது கையை நுழைத்தார்கள்.அவர்களது கையில் ஈரம் பட்டது.உணவுக்காரரே (கடைக்காரரே) என்ன இது?எனக்கேட்க, அல்லாஹ்வின் தூதரே மழை பொழிந்து (நனைத்து) விட்டது”என்று கூறினார்.அதற்கு நபி(ஸல்)அவர்கள் மக்கள் பார்க்கும் அளவிற்கு அதை நீ மேலே வைத்திருக்க வேண்டாமா? என்று கூறிவிட்டு எவர் ஏமாற்றுகிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்லர்”என்று கூறினார்கள்.

(முஸ்லிம் 295)

நபி(ஸல்)அவர்கள் எங்கள் வீட்டிலிருக்க என்னுடைய தாய் ஒரு நாள் என்னை அழைத்து, இங்கே வா!நான் உனக்குத் தருகிறேன்”என்றார்கள்.உடனே நபியவர்கள் என்ன கொடுக்க அழைத்தீர்?என்று என் தாயைப்பார்த்துக் கேட்க,அதற்கு என் தாய், பேரீத்தம் பழம் கொடுக்க”என்றார்கள். நீர் அவருக்கு எதையும் கொடுக்கவில்லையெனில் நீ பொய் கூறி விட்டாய் என்பதாக உன் மீது எழுதப்படும்”என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு ஆமிர் (ரலி)அறிவிக்கிறார்கள்.(அபூதாவூத் 4993)

ஒட்டகம்,ஆடு போன்ற கால்நடைகளை விற்பனை செய்வதற்காக அதன் பாலை (கறக்காது)தடுத்து நிறுத்தி(அவற்றின் மடியை கனக்கச்செய்து அதிகமாகப் பால் தருவது போன்று)காண்பித்து விடாதீர்கள் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.

(புகாரி 2148,முஸ்லிம் 3890)

''மோசடி செய்பவர் நரகத்தில் இருப்பார்! நம்முடைய கட்டளை யில்லாத ஒரு காரியத்தை யாரேனும் செய்தால் அது ஏற்றுக் கொள்ளப்படாது!'' என்று நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். (புகாரி 2142)

3.ஏமாற்றுதலின் மற்றொரு வகை பொய் பேசுவது.

பொய்யைக்குறித்தும் எச்சரிக்கை விடுக்கிறது இஸ்லாம் எண்ணற்ற குர்ஆன் வசனங்களும் நபிமொழிகளும் பொய்யின் விபரீதத்தை விளக்குகிறது.

‘கேள்விப்பட்டதையெல்லாம் சொல்பவன் அவன் பொய்யன் என்பதற்குப் போதுமானதாகும்”(முஸ்லிம்)

நிச்சயமாக உண்மை என்பது புண்ணியச் செயலுக்கு வழி காட்டுகிறது.புண்ணியச் செயல் சுவர்க்கம் செல்ல வழி காட்டுகிறது. திண்ணமாக ஒரு மனிதன் உண்மையையே பேசிக் கொண்டி ருக்கிறான்.இறுதியில் அவன் அல்லாஹ்விடத்தில் உண்மையாளன் என்று எழுதப்படுகிறான்.

மேலும் நிச்சயமாகப் பொய் என்பது தீமை செய்ய வழி காட்டுகிறது.தீமை நரகிற்கு வழி காட்டுகிறது.நிச்சயமாக ஒரு மனிதன் பொய் பேசிக் கொண்டிருக்கிறான்.இறுதியில் அல்லாஹ்விடத்தில் அவன் மகாப் பொய்யன் என்று எழுதப்பட்டு விடுகிறான்.

(புகாரி 6094,முஸ்லிம்)

4.ஏமாற்றுவதே கூடாது என்கிறது இஸ்லாம் அதை கண்டிப்புடன் எதிர்க்கிறது.ஏமாற்றுபவன் நிச்சயமாக ஷைத்தானாகத் தான் இருப்பான் என்று குர்ஆன் கூறுகிறது.

குறிப்பிட்ட மரத்திற்கருகில் நெருங்காதீர் என்ற இறைக்கட்டளையை ஆதமிற்கும் ஹவ்வாவிற்கும் மறக்கடிக்கச் செய்து, அந்த மரத்தின் பக்கம் சென்றால் நீங்கள் வானவர்களாக ஆகி விடுவீர்கள்.அப்படி நீங்கள் ஆகக் கூடாது என்பதற்காகத்தான் அல்லாஹ் இவ்வாறு தடை செய்திருக்கிறான்”என்று ஆசை வார்த்தை கூறி இருவரையும் ஏமாற்றிவிட்டான்.(பார்க்க அல்குர்ஆன் 7:20 / 20:120)

நம் பெற்றோரை வஞ்சகமாகப் பேசி ஏமாற்றியது மட்டுமல்லாது நம்மையும் நம்முடைய சந்ததிகளையும் அந்த ஷைத்தான் ஏமாற்றி நரகிற்கு கொண்டு செல்ல நினைக்கிறான்

‘ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவரையும் அவர்களுடைய மானத்தை அவர்கள் பார்க்குமாறு அவர்களுடைய ஆடையை அவர்களை விட்டும் களைந்து சுவனபதியை விட்டு வெளியேற்றியது போல் அவன் உங்களை (ஏமாற்றிச்) சோதனைக்குள்ளாக்க வேண்டாம், நிச்சயமாக அவனும் அவன் கூட்டத்தாரும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் - நீங்கள் அவர்களைப் பார்க்க முடியாதவாறு, மெய்யாகவே நாம் ஷைத்தான்களை நம்பிக்கை இல்லாதவரின் நண்பர்களாக்கி இருக்கிறோம்.”(அல்குர்ஆன் 7:27)

ஷைத்தான் அவர்களுடைய (பாவச்)செயல்களை அவர்களுக்கு அழகாகக் காண்பித்து "இன்று மனிதர்களில் உங்களை வெற்றி கொள்வோர் எவருமில்லை, மெய்யாக நான் உங்களுக்கு துணையாக இருக்கின்றேன்!" என்று கூறினான், இரு படைகளும் நேருக்கு நேர் சந்தித்த போது அவன் புறங்காட்டிப் பின்சென்று "மெய்யாக நான் உங்களை விட்டு விலகிக் கொண்டேன், நீங்கள் பார்க்க முடியாததை நான் பார்க்கிறேன், நிச்சயமாக நான் அல்ல்லாஹ்வுக்குப் பயப்படுகிறேன்,அல்லாஹ் தண்டனை கொடுப்பதில் கடினமானவன்" என்றுகூறினான்.(அல் குர்ஆன் 8:48)

5:இஸ்லாம் மக்களின் நலம் நாடவேண்டும் என்றும் கேலி பேசி மனம் புண்படும்படி நடப்பவன் உண்மை இறைவிசுவாசியாக இருக்கமுடியாது என்றும் கூறுகிறது

பின்வரும் நபிமொழிகள் அதை உறுதிப்படுத்துகிறது

''அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், முஸ்லிம்களின் தலைவர்களுக்கும் மக்களுக்கும் நன்மையை நாடுவதே மார்க்கம்'' என்ற நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(புகாரி/ முஸ்லிம்)

"அநீதியிழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும்அவன் பாவியாக இருந்தாலும்"என நபி ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

(முஸன்னஃப் அபீஷைபா)

''பிற முஸ்லிம்கள் எவருடைய நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப்பெறுகிறார்களோ அவரே முஸ்லிமாவார்" என்றார்கள் நபியவர்கள்.

(புகாரி 10)

மேற்கூறப்பட்ட அனைத்து வசனங்களும் நபி மொழிகளும் ஒருவர் மற்றவரை ஏமாற்றுவதையும்,பொய் பேசுவதையும்,மோசடி செய்வதையும்,பரிகாசம்,கேலி,கிண்டல் செய்வதையும் கடுமையாகக் கண்டிக்கின்றவையாக இருக்கின்றன.

மேலும் ஏப்ரல் ஒன்றை மையமாக வைத்து நடக்கின்ற ஏமாற்றுச் செயல்கள் அனைத்தும் ஏப்ரல் ஒன்றில் மட்டுமல்ல வாழ் நாள் முழுவதும் தவிர்ந்து கொள்ளப்படவேண்டியவை என்பதையும் அவை அனைத்தும் நமது பகிரங்க விரோதி ஷைத்தானுடைய செயல்கள் எனபதையும் நாம் விளங்கிக் கொள்ளவேண்டும்

ஒரு முஸ்லிம் என்றைக்கும் எப்போதும் மற்றவர்களின் மனது புண்படும் படியாகவோ,அவர்களை ஏமாற்றுபவனாகவோ, பரிகாசம் செய்பவனாகவோ,பொய் பேசுபவனாகவோ இருக்க மாட்டான்.

ஏப்ரல் ஒன்று அன்று நடைபெறுகின்ற ஏமாற்றுக்காரியங்களை முஸ்லிம்கள் தங்களைச் சார்ந்து வாழ்கின்ற மற்ற மாற்றுக் கொள்கைகளைச் சார்ந்தவர்களிடத்தில் நல்ல அணுகு முறையோடு எடுத்துச் சொல்ல வேண்டும்.

ஒரு முஸ்லிம் தன் வாழ்நாளில் இறைவனிடத்திலும், சக மனிதர்களிடத்திலும், வியாபாரத்திலும், கொடுக்கல் வாங்கலிலும் மோசடி செய்யாதவனாக, ஏமாற்றாதவனாக, வாய்மையாளனாக, நாணயமானவனாக இருக்க அல்லாஹ் அருள் புரிவானாக!ஆமீன்

ஆக்கம்:

Kaja firdousi MA

ஆசிரியர் JFA கல்லூரி

நாகர்கோவில்

தொடர்புக்கு:9894896579

 

செய்திகள்

View All

கட்டுரைகள்

JAQH

jammiyyathu Ahlil Qur'an Val Hadees

Head Office

jammiyyathu Ahlil Qur'an Val Hadees

61/26, Iyyasami St, Pudupet,
Komaleeswaranpet, Egmore,
Chennai, Tamil Nadu 600002

Quick Links

Copyright © jaqh.org. All Rights Reserved. Designed by Zeentech Solutions