Sunday, 15-September-2024
ரமழானுக்குப் பின் நாம்

ரமழானுக்குப் பின் நாம்
 தொகுப்பு: மௌலவி S.யாஸிர் ஃபிர்தவ்ஸி
ரமழான் மாதத்தில் நோன்பை நல்ல முறையில் நிறைவேற்றவும், தொழுகை, குர்ஆன் ஓதுதல், பிரார்த்தனை, திக்ரு, தர்மம்... போன்ற ஸாலிஹான அமல்களை செய்யவும் வாய்ப்பளித்த அல்லாஹ்விற்க்கே எல்லா புகழும்.திக்ரு, தர்மம்... போன்ற ஸாலிஹான அமல்களை செய்யவும் வாய்ப்பளித்த அல்லாஹ்விற்க்கே எல்லா புகழும்.
அவனது அருளும் சாந்தியும் நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களது குடும்பத்தினர்கள், தோழர்கள், அவர்களை வாய்மையுடன் பின்பற்றி வந்தவர்கள் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! ரமழானில் எந்த இறைவனோ அவன் தான் எல்லா மாதங்களுக்கும் இறைவன். அவனுக்கு கட்டுப்பட்டு வணக்க வழிபாடுகளை தொடர்வோம். அவனை சந்திக்கின்ற வரை இம்மார்க்கத்தில் உறுதியோடு இருக்க அவனிடம் பிரார்த்தனை செய்வோம். வணக்க வழிபாடுகளும், அவனுக்கு கட்டுப்பட்டு நடப்பதும் பெருநாளோடு முடிந்து விடாது.
அல்லாஹ் கூறுகிறான்:
உமக்கு மரணம் வரும் வரை உமது இறைவனை வணங்குவீராக!
{15:99}
ஸலஃபுகளில் சிலர் கூறினார்கள்:
ஒரு உண்மையான முஸ்லிமின் அமல்களை மரணம் தான் முடிவுக்கு கொண்டு வரும்.
உமர்(ரலி)அவர்கள் மிம்பரில் ஏறி மக்களுக்கு உரையாற்றும் போது
நிச்சயமாக எவர்கள்; “எங்கள் இறைவன் அல்லாஹ்தான்” என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள் பால் மலக்குகள் வந்து, ”நீங்கள் பயப்படாதீர்கள்; கவலையும் பட வேண்டாம், உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்” (எனக் கூறியவாறு) இறங்குவார்கள். {41:30} 📖
இவ்வசனத்தை ஓதிக்காட்டி விட்டு கூறினார்கள், அல்லாஹ்விற்க்கு கட்டுப்படுவதில் தொடர்ந்து உறுதியாக இருங்கள்.
எனவே ரமழான் மாதம் சென்று விட்டால் வணக்க வழிபாடுகளை விட்டும் ஓர் இறை நம்பிக்கையாளன் தொடர்பற்று போக மாட்டான்.
 உபரியான நோன்புகளின் சிறப்பும், அதன் நன்மைகளும்
"ஒருவர் ரமழானில் நோன்பு நோற்று, அடுத்து ஷவ்வாலின் ஆறு நாட்கள் தொடர்ந்து நோன்பு வைத்தால், ஆண்டு முழுவதும் நோன்பு வைத்தவர் போலாவார்” என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூ அய்யூப்(ரழி),
(நூல்: முஸ்லிம்)
இந்நபி மொழிக்கு மார்க்க அறிஞர்கள் மூன்று விதமான விளக்கங்களை கொடுத்துள்ளனர்.
1 பெருநாளை அடுத்து வருகின்ற தொடர்ச்சியான ஆறு நாட்கள்.
2 ஷவ்வால் மாதத்தில் தொடர்ச்சியான ஏதாவது ஆறு நாட்கள்
3. ஷவ்வால் மாதத்தில் ஏதாவது ஆறு நாட்கள்
இம்மூன்று கருத்தில் எதனடிப்படையிலும் நாம் அமல் செய்யலாம். (அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்)
ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பதும், ரமழானோடு ரமழான் நோன்பு நோற்று வருவதும் காலமெல்லாம் நோன்பிருப்பதாகும். அறிவிப்பாளர்: அபூ ஹூரைரா(ரழி) (நூல்:அஹ்மத், முஸ்லிம்) 📚
என் நண்பர் முஹம்மது(ஸல்) அவர்கள் மூன்று காரியங்களை எனக்கு உபதேசம் செய்தார்கள்
1. ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு வைப்பது,
2. லுஹா நேரத்தில் இரண்டு ரக்க அத் தொழுவது,
3. நான் உறங்கும் முன் வித்ரு தொழுவது.
அறிவிப்பாளர்: அபூ ஹூரைரா(ரழி)
(நூல்: புகாரி, முஸ்லிம்)
‘மாதத்தில் மூன்று நாட்கள் நோன்பு வைத்தால், 13,14,15 ஆம் நாட்களில் நோன்பு வைப்பீராக’ என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூதர் (ரழி),
(நூல்: திர்மிதீ, அஹ்மத், நஸாயி)
அரஃபா நாளில் நோன்பு வைப்பது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ‘சென்று போன மற்றும் வர உள்ள வருடங்களின் பாவங்களை அது அழிக்கும்’ என பதில் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூ கதாதா(ரழி). (நூல்:முஸ்லிம்.)
முஹர்ரம் மாதத்தில் 10 ஆம் நாளின் நோன்பு பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் சொன்னார்கள்: *அது சென்ற ஆண்டின் பாவங்களுக்கு பரிகாரமாக ஆகிறது.
அறிவிப்பாளர்: அபூ கதாதா(ரழி)
(நூல்: முஸ்லிம்.)
நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது: ரமழான் மாதத்திற்குப் பிறகு எது சிறந்த நோன்பு? அதற்கு நபியவர்கள் சொன்னார்கள், ரமழான் மாதத்திற்கு பிறகு சிறந்த நோன்பு முஹர்ரம் மாதத்தின் நோன்பு.
அறிவிப்பாளர்: அபூ ஹூரைரா(ரழி)
(நூல்: முஸ்லிம்)
திங்கள் கிழமையில் நோன்பு நோற்பது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்குச் சொன்னார்கள், அது எத்தகைய நாளெனில் அன்று தான் நான் பிறந்தேன். அன்று தான் என் மீது வஹி எனும் இறையருட் செய்தி இறக்கப்பட்டது. அறிவிப்பாளர்: அபூ கதாதா(ரழி) (நூல்:முஸ்லிம்.)

நபி (ஸல்)கூறினார்கள்: திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் (இறைவனின் முன்னால்) அமல்கள் எடுத்துக் காட்டப்படுகின்றன. நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் என்னுடைய அமல்கள் எடுத்துக் காட்டப்பட வேண்டுமென நான் விரும்புகின்றேன். அறிவிப்பாளர்:அபூ ஹூரைரா(ரழி), (நூல்:திர்மிதி)
ஐவேளை தொழுகையை ஜமாஅத்தோடு பள்ளி வாசலில் நிறை வேற்றுவதோடு உபரியான தொழுகையிலும் கவனம் செலுத்த வேண்டும்.
ரமழான் மாதத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக ஜமாஅத் தொழுகையில் பங்கெடுத்தனர். ரமழானுக்குப்பின் பள்ளி வாசல்கள் வெறிச்சோடி கிடக்கின்றன. இந்நிலை மாற வேண்டும்.
‘கூட்டுத் தொழுகை என்பது, தனித்து தொழுவதை விட தகுதியால் 27 மடங்கு சிறந்ததாகும்’. என நபி(ஸல்)கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரழி),
(நூல்: புகாரி,முஸ்லிம்)
ரமழான் மாத இரவின் சிறப்புத் தொழுகை முடிந்து விட்டாலும் திண்ணமாக இரவுத் தொழுகை என்பது ஆண்டு முழுவதும் ஒவ்வொரு இரவிலும் கடை பிடிக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ‘கடமையான தொழுகைக்குப் பிறகு சிறப்பு மிக்க தொழுகை இரவுத் தொழுகையாகும்’. அறிவிப்பாளர்:அபூ ஹூரைரா(ரழி)
(நூல்: முஸ்லிம்.)
இரவுத் தொழுகையின் சிறப்பு குறித்து ஏராளமான குர்ஆன் வசனங்களும் நபி மொழிகளும் வந்துள்ளன. விரிவஞ்சி நாம் இங்கே குறிப்பிடவில்லை.
‘கடமை அல்லாத உபரியான பனிரெண்டு ரக்க அத்களை ஒவ்வொரு நாளும் அல்லாஹ்வுக்காகத் தொழும் ஒரு முஸ்லிமான அடியானுக்கு, சொர்க்கத்தில் ஒரு வீட்டை அல்லாஹ் கட்டுகின்றான்.
அறிவிப்பாளர்:உம்மு ஹபீபா (ரழி),
(நூல்:முஸ்லிம்) (ஃபஜ்ருக்கு முன் 2, லுஹருக்கு முன் 4, பின் 2,
மஃரிபிற்கு பின் 2,
இஷா விற்கு பின் 2)
குர்ஆனோடு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள குறைந்தது தினமும் ஒரு ஜூஸ்வு வீதம் குர்ஆன் முழுவதும் ஓதி முடிக்க முயற்சி செய்ய வேண்டும். குர்ஆன் ஓதுவதின் சிறப்பு குறித்து ஏராளமான குர்ஆன் வசனங்களும், நபி மொழிகளும் வந்துள்ளன.
சகோதரர்களே!
நன்மையான அனைத்து காரியங்களிலும் பேரார்வம் கொள்ளுங்கள், வழிபாடுகளை நிறை வேற்றுவதில் நன்முயற்ச்சி செய்யுங்கள், தவறுகளையும் தீமைகளையும் தவிர்த்து விடுங்கள். அப்படிச் செய்தால் இவ்வுலகில் தூய வாழ்வையும் மரணத்திற்குப் பிறகு அதிகமான கூலியையும் நீங்கள் வென்றெடுப்பீர்கள்!
ஆணாயினும், பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற்செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம்; இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம்.
{16:97}
”எங்கள் இறைவனே! (உனக்காக நாங்கள் செய்த அமல்களை) எங்களிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”
{2:127}
யா அல்லாஹ்! எங்களையும், எங்கள் பெற்றோர்களையும், அனைத்து முஸ்லீம்களின் பாவங்களையும் மன்னிப்பாயாக! (ஈமான்) நம்பிக்கையிலும் நற்செயல் புரிவதிலும் எங்களை உறுதியோடு இருக்கச் செய்வாயாக! தூய வாழ்வு கொண்டு எங்களை வாழச் செய்வாயாக! மேலும் உத்தமர்களின் குழுவில் எங்களைச் சேர்த்து வைப்பாயாக!

செய்திகள்

View All

வீடியோக்கள்

கட்டுரைகள்

Programme...

View All

JAQH

jammiyyathu Ahlil Qur'an Val Hadees

Head Office

jammiyyathu Ahlil Qur'an Val Hadees

61/26, Iyyasami St, Pudupet,
Komaleeswaranpet, Egmore,
Chennai, Tamil Nadu 600002

Quick Links

Copyright © jaqh.org. All Rights Reserved. Designed by Zeentech Solutions