அழிவு நாள் நெருங்கிவிட்டதற்கான அடையாளங்கள் வெளியாகிவிட்டன. சமீப காலமாக அந்த அடையாளங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. பொதுவாக உலகளாவிய அளவில் பல அறிகுறிகள் அவ்வப்போது வெளியாகிக் கொண்டிருந்தாலும் எந்தப் பகுதியில் இஸ்லாம் அறிமுகப்படுத்தப்பட்டதோ, எந்தப் பகுதியில் படைத்தவனால் அனுப்பப்பட்ட இறைத் தூதர்கள் அதிகமாக வாழ்ந்து, இறைமார்க்கத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்வதிலும், ஏக இறைவனாகிய அல்லாஹ்வை மட்டுமே வணங்கவேண்டும் என்ற ஓரிறைக் கொள்கையை நிலைநாட்டுவதிலும் அரும்பாடுபட்டார்களோ அப்படிப்பட்ட பகுதியில்தான் தற்போது இறுதித் தூதர் அறிவித்துச் சென்ற அடையாளங்கள் ஒன்றின்பின் ஒன்றாக வெளியாக துவங்கிவிட்டன. அணிவதற்கு சரியான ஆடையின்றியும், காலணிகள் இல்லாமலும், ஆடுகள் மேய்த்து தங்கள் வாழ்க்கையை கழித்தவர்கள் மிக உயரமான கட்டிடங்களை எழுப்புகின்ற காலத்தை நீர் காண்கின்றபோது அழிவுகள் நெருங்கி விட்டது என்பதை நீ தெரிந்துகொள் என்று நபியவர்கள் அறிவித்தார்கள். யாருடைய கட்டிடம் உயரமானது என்று போட்டிப் போடுவார்கள் என்றும் கூறினார்கள். அதை இன்று கண்கூடாக அரபு உலகிலே பார்க்கின்றோம். துபாயில் இருக்கும் ஊசிமுனை கோபுரம், இறைவனின் முதல் இல்லம் கஃபாவின் அருகிலேயே வானளவு கோபுரத்தை உயர்த்தி கஃபா இருக்கும் இடம் தெரியாத அளவிற்கு இந்த கோபுரம் மக்கள் பார்வையை கவர்ந்து கொண்டிருக்கிறது. அதன் மூலம் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்கள். இறையச்சத்தை போக்கக்கூடிய பகட்டுக்கள் மலந்துவிட்டன, ஆடம்பரங்கள் அதிகரித்துவிட்டன, கேலிக்கைகள் கூடிவிட்டன, புனித யாத்திரைகள் உல்லாசப் பயணமாக மாற்றப்பட்டுவிட்டன. யஹுதிகளையும், நஸ்ரானிகளையும் அரேபிய தீபகற்பத்திலிருந்து அப்புறப்படுத்துங்கள் என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள் முஸ்லிம் 3313), ஆனால் அந்தக் கட்டளை இன்று நிராகரிக்கப்பட்டுவிட்டது அல்லாஹ்வின் மார்க்கத்தை அழிக்க நினைப்பவர்களையும், தங்களுடைய தீய கலாச்சாரத்தை திணிக்க நினைப்பவர்களையும் தங்கள் உற்ற நண்பர்களாக ஆக்கி அவர்களோடு கைசேர்த்து நிற்கின்ற அவல நிலை அழிவு நாளின் அடையாளம் இல்லாமல் வேறு எதுவாக இருக்க முடியும்? இன்னொரு சந்தர்ப்பத்தில் பல தெய்வ வழிபாட்டுக்காரர்களை அரேபிய தீபகற்பத்திலிருந்து வெளியேற்றுங்கள் என நபி ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, 2825, முஸ்லிம், 3089) அல்லாஹ்வுடைய தூதர்(ஸல்) அவர்கள் தங்களுடைய அனைத்துவிதமான முயற்சிகளையும் பயன்படுத்தி, தங்களையே தியாகம் செய்து மக்களை அனைவரையும் சிலை வழிபாட்டில் இருந்து காப்பாற்றி ஏக இறைவன் அல்லாஹ்வை மட்டுமே வணங்கக்கூடிய மக்களாக அவர்கள் மாற்றிவிட்டுத்தான் இந்த உலகை விட்டு பிரிந்தார்கள். ஆனால் இன்று அதே அரேபிய தீபகற்பத்தில் சிலை வழிபாடு நடத்துவதற்கு ஆட்சியாளர்கள் எல்லா விதமான ஒத்துழைப்புகளையும் கொடுத்து வருகின்றனர். அதே நேரத்தில் அல்லாஹ்வுடைய மார்க்கத்தை அதன் தூய வடிவில் மக்களுக்கு எடுத்துரைத்து பிரச்சாரம் செய்யக் கூடியவர்கள் கொடுமைப்படுத்தி சிறையில் அடைத்து வைக்கின்றனர். அபுதாபியில் மக்கள் போக்குவரத்து அதிகமான நெடுஞ்சாலையில் சூரிய நாராயணன் கோவிலை கட்டுவதற்காக பல ஏக்கர் நிலத்தை அரேபிய ஆட்சியாளர்கள் வழங்கி அதற்கு அடிக்கல் நாட்டு விழா அறங்கேற்றி உள்ளனர். ஓரிறைக் கொள்கையின் எதிரியாகவும், இறை இல்லத்தை இடித்து தகற்றிவிட்டு அந்த இடத்தில் சிலை வழிபாடு நடத்தும் ஆலயம் எழுப்பக்கூடியவர்களாகவும், முஸ்லிம்களின் பகிரங்க விரோதியாகவும் இருக்கின்றவர்களை அழைத்து துவக்க விழா கண்டுள்ளனர். இறைத்தூதர் சிலாகித்துக் கூறிய இறைவனால் புகழ்ந்துரைக்கப்பட்ட இறை இல்லத்தை ஆக்கிரமித்து, நாடற்றவர்களாக திரிந்தவர்கள் அங்கே குடியேறி அந்த நாட்டில் உள்ள மக்களை எல்லாம் கொன்று குவித்து பூர்வீக மக்களை வெளியேற்றுகின்ற மாபாதகச் செயலை பல்லாண்டுகளாக செய்து கொண்டிருக்கும் வெறிபிடித்த யூத சக்திகளோடு தோளோடு தோள் இணைந்து செயல்படுகின்ற ஒப்பந்தத்தை சமீபத்தில் சில அரபு நாடுகள் நிறைவேற்றி இருக்கின்றன. இதன் மூலம் அல்லாஹ்வின் சாபத்திற்குரியவர்களான யஹுதிகள் தங்களுடைய திட்டத்தை செயல்படுத்துவதற்கு வழிவகுத்துக் கொடுத்துள்ளனர். புனித இறை இல்லங்கள் இருக்கின்ற பூமியில் அவர்களின் விமானங்கள் பறந்து செல்வதற்கு அனுமதி வழங்கியுள்ளனர். அவர்களுடைய தயாரிப்புகளை பகிரங்கமாக இறக்குமதி செய்வதற்கு வழி திறந்து கொடுத்துள்ளனர். அரேபிய ஆட்சியாளர்களின் இந்தச் செயல் சர்வதேச அளவில் இறைநம்பிக்கையுடைய முஸ்லிம்களின் இதயங்களில் மிகப் பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றி சிந்தித்து இறைவனிடம் பாதுகாப்புத் தேடவேண்டியது ஒவ்வொருவர் மீதும் கடமையாகும். ஆக்கம் : #அஷ்ஷெய்க்__S_கமாலுதீன்_மதனி.