நபி நிந்தனையின் வரலாறு
குளச்சல் நூர்முஹம்மது
கடந்த மாதம் டைம்ஸ்நவ் (TimesNow) நெறியாளர் நவிகா குமாரின் தொலைகாட்சி விவாதத்தில் கலந்து கொண்ட நுபுர் சர்மா என்ற பாரதீய ஜனதா கட்சி செய்தி தொடர்பாளர் அகிலத்தின் அருட்கொடை அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்களை இழிவு படுத்தி பேசியுள்ளார். நுபுர் சர்மாவைத் தொடர்ந்து தில்லி பாஜகவின் ஊடகத்துறை தலைவராக இருந்த நவீன் ஜிண்டலும் இதே கருத்தை சமூக ஊடகமான ட்விட்டரில் பதிய இந்தியாவிலும் உலக நாடுகளிலும் இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல நாடுகள் தமது நாட்டிற்கான இந்திய தூதரை வெளியுறவுத்துறை அலுவலகத்தில் அழைத்து தமது கண்டனங்களை அறிவித்துள்ளனர். பல நாடுகளின் இஸ்லாமிய அறிஞர்கள் தங்கள் கண்டனஙகளை சமூக ஊடகங்கள் வாயிலாக பதிவு செய்துள்ளனர். இந்த கட்டுரை எழுதப்படும் வெள்ளிக்கிழமையன்று ஹரமில் ஜும்ஆ உரை நிகழ்த்திய ஷேக் அப்துல்லா அல் ஜுஹானி இந்த நிகழ்வை வன்மையாக கண்டித்தது மட்டுமன்றி நபிகள் நாயகத்தை இழிவாகப் பேசியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையையும் வைத்திருக்கிறார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு தங்கள் உயிர்களை விட மேலானவர். ( திருக்குர்ஆன் 33:6). நபிகளார் (ஸல்) இழிவு படுத்தப்படும் போது இந்த சமூகம் தாங்க முடியாமல் தவிப்பதை நாம் பார்க்கிறோம். சமீப காலமாக இத்தகைய செயல்பாடுகள் வலதுசாரி சங்க பரிவார அமைப்புகளால் தொடர்ந்து செய்யப்படுவதையும் நாம் பார்த்து வருகிறோம். வரலாற்றின் பக்கங்களை நாம் ஆய்வு செய்யும் போது நபி நிந்தனை என்பது சமீப காலமாக தொடங்கிய ஒன்று அல்ல என்பதையும் காலம் காலமாக இந்த செயல்பாட்டை இஸ்லாமிய மார்க்கத்தின் எதிரிகள் தொடர்ந்து செய்து வருகின்றனர் என்பதையும் நம்மால் உணர முடியும்.
திருக்குர்ஆன் (26:214) உமது நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக என்ற வசனம் இறங்கிய போது மக்காவின் அனைத்து கோத்திரத்தார்களையும் ஒருங்கிணைத்து ஸஃபா மலைக்குன்றின் மீதேறி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு கடும் வேதனை ஒன்று இருக்கின்றது என்ற எச்சரிக்கையை செய்தார்கள். அப்பொழுது நபிகளாரின் பெரிய தந்தை அபூலஹப் அதே சபையில் அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களை சபித்து இழிவு படுத்தினான் அன்று தொடங்கி பல்வேறு நிந்தனைகளை தாண்டித்தான் இஸ்லாமிய மார்க்கம் வளர்ந்தது என்பது நாம் அறிய வேண்டிய முதல் பாடம்.
நம்பிக்கைக்குரியவர் என்றும் உண்மையாளர் என்றும் போற்றியவர்கள் அன்று முதல் பகிரங்க எதிரிகளாக மாறினார்கள். சூனியக்காரர் என்றும் பைத்தியக்காரர் என்றும் மனித குல மாணிக்கம் நபிகள் நாயகத்தை (ஸல்) ஏசினார்கள். “அரசர்கள் ஒரு நகரத்துள் (படையெடுத்து) நுழைவார்களானால், நிச்சயமாக அதனை அழித்து விடுகிறார்கள்; (திருக்குர்ஆன் 27:34) என்று திருக்குர்ஆன் படையெடுப்புகளைப்பற்றிக் கூறுகின்றது. ஆனால் வரலாற்றில் முன்னுதாரணமே இல்லாத அளவு தம்மை ஊரைவிட்டு விரட்டிய, சொத்துக்களை சூறையாடிய, தம் தோழர்களைக் கொன்ற எதிரிகளுக்கு மக்கா வெற்றியின் போது மகத்தான பொது மன்னிப்பை வழங்கிய இந்த மனித நேயத்தின் சிகரம் போர் வெறியராக, இரத்த வேட்கை கொண்டவராக, காட்டுமிராண்டியாக சித்தரிக்கப்பட்டார்.
வரலாற்றின் பக்கங்களை நாம் புரட்டும் போது நபிகளார் மரணமடைந்து இரு வருடங்களுக்குப் பின்னர் (கிபி 634) எழுதப்பட்ட டாக்டிரினோ ஜாக்கோபி (Doctrino Jacobi) என்ற புராதான கிரேக்க புத்தகத்தில் நபிகளாரை போர் வெறியராகவும், காட்டுமிராண்டியாகவும், போலி தீர்க்கதரிசியாகவும் விமர்சனம் செய்து பிரச்சாரம் செய்த ஒரு கிறித்தவ பாதிரியைப் பற்றி கூறுவதை நாம் பார்க்க முடியும். பைஸாந்திய பேரரசிற்கும் இஸ்லாமிய அரசிற்கும் இடையில் போர் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் யூதர்களை கிறித்தவ மதத்தின் பால் ஒன்று சேர்க்க எழுதப்பட்ட இந்த புத்தகம் நபி நிந்தனையின் தொடக்கம் எவ்வாறு இருந்தது என்பதை நமக்கு அறியத்தருகின்றது.
கிபி 741 ஆம் ஆண்டு காத்தலிக் என்சைக்லோபீடியா (Catholic Encyclopedia) டாக்டர் ஆப் சர்ச் (Doctor of Church) என்று வாழ்த்திய பிரபல கிறித்தவ மத அறிஞர் ஜாண் டமாஸ்கஸ்,(John Damascus) தமது Concerning Heresies என்ற புத்தகத்தில் நபிகளாரை தஜ்ஜாலின் முன்னோடியாக அறிமுகப்படுத்துவதை நாம் பார்க்கலாம். கி.பி. 861 கார்டோபாவைச் சார்ந்த அல்வரோஸ் பவுல் (Alvaroz Paul) என்ற கிறித்தவ அறிஞர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மஸீஹுத்தஜ்ஜாலாகவே அறிமுகப்படுத்துவதையும் நாம் பார்க்கிறோம். தஜ்ஜாலைப் பற்றியும் அவன் மூலம் ஏற்படுகின்ற சோதனையைப் பற்றியும் மனித குலத்திற்கு கற்றுத்தந்த, தஜ்ஜாலைப் பற்றி எல்லா இறைத்தூதர்களைவிடவும் அதிகமாக எச்சரித்த இறைத்தூதரை (ஸல்) தஜ்ஜால் என்றே அறிமுகப்படுத்தி தமது மக்களை இஸ்லாத்தை விட்டு அகற்ற முயற்சி செய்தனர்.
1095 நவம்பர் 28, போப் இரண்டாம் அர்பன் (Pope Urban II) கிறித்தவர்களின் புனிதத்தலமான ஜெரூஸலத்தை மீட்க புனிதப் போரில் ஈடுபடவேண்டுமென்று அறிவித்ததைத் தொடர்ந்து இரண்டு நூற்றாண்டு காலம் நடபெற்ற சிலுவைப்போர் இந்த நிந்தனையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. போப்பாண்டவரின் கோரிக்கையை ஏற்று புறப்பட்ட கிறித்தவ அரசர்கள் செல்லுமிடங்களிலெல்லாம் ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்தார்கள். இரத்த வேட்கையோடு வெறி கொண்டவர்களாக அரேபிய தீபகற்பத்தில் பவனி வந்த இவர்களால் அரேபிய நாடுகளில் இரத்த ஆறு ஓடியது. இந்த கொலைகளை நியாயப்படுத்துவதற்காக முஸ்லிம்கள் செமிட்டிக் (Semitic) மதங்களோடு (யூத, கிறித்தவ) எவ்வித தொடர்புமில்லாதவர்கள் என்றும், பல தெய்வ கொள்கையைக் (Pagan) கொண்டவர்கள் என்றும் முகம்மதியர்கள் என்றால் முஹம்மதை வணங்குபவர்கள் என்றெல்லாம் பிரச்சாரங்கள் செய்யப்பட்டது. எனவே இணைவைப்பாளர்களாக இருக்கும் முஸ்லிம்களை கொல்வது பாவமல்ல. மேலும் அது கர்த்தருக்கு மிகவும் விருப்பமான செயல் என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டது.
சிலுவைப் போரின் காலகட்டத்தில் செய்யப்பட்ட உண்மைக்குப் புறம்பான இந்த பிரச்சாரங்கள் முஸ்லிம்களைக் குறித்த ஒரு பிம்பத்தை மேற்கத்திய மக்கள் மனதில் உருவாக்கியது. நாகரீகமோ கலாச்சாரமோ இல்லாத இரத்த வெறியர்களின் கூட்டமாக முஸ்லிம்களையும், அவர்களின் தலைவராக முஹம்மது (ஸல்) அவர்களையும் வர்ணிப்பதில் இவர்கள் ஓரளவு வெற்றி பெற்றனர்.
1187ல் சுல்தான் சலாவுதீன் அய்யூபி இஸ்லாமிய படைகளை ஒருங்கிணைத்து சிலுவைப்போரின் மூலம் இழந்த ஜெரூசலத்தைக் மீண்டும் கைப்பற்றினார். புகழ்பெற்ற ஹத்தீன் போரில் பெரும் வெற்றியை ஈட்டி ஜெரூசலத்திற்குள் நுழைந்தார். இது மேற்கத்தியர்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு பேரிடியாக இருந்தது. மீண்டும் சிலுவைப்போருக்கான அறைகூவல் விடுக்கப்பட்டது. இங்கிலாந்து அரசர் ரிச்சர்ட் த லயன் ஹார்டின் (Richard the Lion Heart) தலைமையில் பெரும் படை மீண்டும் ஜெரூசலத்தை கைப்பற்ற சிலுவைகளை ஏந்தி புறப்பட்டது. இந்த படையும் சுல்தான் சலாவுதீன் அய்யூபியின் படையும் நேருக்கு நேராக பல போர்க்களைங்களை சந்தித்தது. வெற்றியும் தோல்வியும் இரு தரப்பிற்கும் மாறி மாறி ஏற்பட்டது. இந்த போர்களுக்கிடையில் ரிச்சர்ட் நோய்வாய்ப்படும் போது சுல்தானின் அரண்மனை மருத்துவர் எதிரி அரசனான ரிச்சர்டிற்கு மருத்துவம் பார்க்க அனுப்பி வைக்கப்படுகிறார். ரிச்சர்டின் குதிரை இறந்ததை அறிந்த சுல்தான் தமது குதிரைகளில் ஒன்றை அன்பளிப்பாக வழங்குகிறார். ரிச்சர்டின் படைவீரர்கள் காய்ச்சலால் அவதிப்படும்போது அவர்களுக்குத் தேவையான குளிர்ந்த நீர் அரண்மனையிலிருந்து அனுப்பி வைக்கப்படுகின்றது.
1099 ஆம் ஆண்டு ஜெருசலத்தை சிலுவைப்படைவீரர்கள் கைப்பற்றும் போது பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் மற்றும் யூதர்கள் கொல்லப்பட்டனர். இறந்த யூத, முஸ்லிம்களின் இரத்தம் ஜெரூசலம் நகரில் ஆறாக ஓடியது. சிலுவைப்போரில் பங்கேற்ற புல்சர் ஆப் சார்ட்ரஸ் (Fulcher of Chartres) என்பவர் கெஸ்டா ஃப்ரான்கோரம் (Gesta Francorum) என்ற புத்தகத்தில் எழுதும் போது சாலமனின் பள்ளிவாசலிலும் மக்களை கொன்று குவித்தோம். கிட்டத்தட்ட 10000க்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்தோம். இறந்தவர்களின் இரத்தத்தில் எங்கள் கெண்டைக் கால்கள் நனையுமளவிற்கு நடந்தோம் என்று பெருமையுடன் கூறுவதை நாம் பார்க்கிறோம். மஸ்ஜிதுல் அக்ஸாவை சர்ச்சாக மாற்றினர்.ஆனால் சலாவுதீன் அய்யூபி 1187ல் பெரும் வெற்றி கொண்ட போது கிறித்தவர்களை கொலை செய்யவில்லை என்பதையும், கிறித்தவர்களின் புனிதப்பயணத்தை தடுக்காமல் அதற்கு தேவையான ஒத்தாசைகளைச் செய்தார் என்பதையும் அரபு கிறித்தவர்களும், யூதர்களுமெல்லாம் சலாவுதீனை எந்த அளவிற்கு மதிக்கின்றனர் என்பதையும் பார்த்த சிலுவைப்படைவீரர்கள் திரும்பி தங்கள் நாடுகளிற்கு சென்று இஸ்லாமிய மார்க்கத்தைப்பற்றியும், சுல்தான் சலாவுதீன் அய்யூபியின் பெருந்தன்மையைப்பற்றியும் பிரச்சாரம் செய்கின்றனர். சுல்தான் சலாவுதீன் மேற்கத்திய நாடுகளில் பிரபலமடைகிறார். இதனால் இஸ்லாத்தைப் பற்றியும், முஹம்மத் ஸல்) அவர்களைப் பற்றியும் நன்மதிப்பு ஏற்படுவதை தடுக்க மீண்டும் பல்லாயிரம் புத்தகங்கள் எழுதப்பட்டது என்பதையும் வரலாற்று ஆசிரியர்கள் நமக்கு அறியத்தருகின்றனர்.
இந்த நிலை 2001 செப்டம்பர் 11 இரட்டை கோபுரங்கள் மீதான தாக்குதலிற்குப் பின்னர் மீண்டும் பெருமளவில் அதிகரிப்பதை நாம் பார்க்கிறோம். 2005 ஆம் ஆண்டு ஜைலண்ட் போஸ்டன் (Jyllands Posten) என்ற டென்மார்க் பத்திரிக்கை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை பயங்கரவாதியாக சித்தரித்து கார்ட்டூனை வெளியிடுகின்றது. உலக முஸ்லிம்களின் வரலாறு காணாத பெரும் எதிர்ப்பை இது சந்தித்தது. 2008 ஆம் ஆண்டு உலகின் 50 பத்திரிக்கைகள் இந்த கார்ட்டூனை கருத்து சுதந்திரத்தின் பெயரில் மீண்டும் வெளியிடுகின்றனர். 2012 ஜூலை மாதம் இன்னசன்ஸ் ஓப் முஸ்லிம்ஸ் (Innocence of Muslims) என்ற திரைப்பட டிரைய்லர் மீடியா ஃபார் கிரைஸ்ட் (Media for Christ) என்ற மிஷினரியின் தயாரிப்பில் நகௌலா பாஸ்ஸெலி நகௌலா (Nakoula Basseley Nakoula) என்ற கயவனின் இயக்கத்தில் யுடூபில் (YouTube) வெளியிடப்படுகின்றது. 2012 செப்டம்பர் மாதம் சார்லி ஹெப்டோ (Charlie Hebdo) என்ற பிரஞ்சு பத்திரிக்கை நபிகளாரை நிர்வாணமாக கார்ட்டூண் வரைந்து வெளியிடுகின்றது.
இவ்வாறு நபிகள் நாயகம் ஸல் அவர்களை இழிவுபடுத்தும் செயல் கடந்த 1400 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த செயலின் காரணமாக முஸ்லிம்களுக்கு தாங்க இயலாத மன வருத்தம் ஏற்படுகின்றது என்பதும் இதற்கெதிரான பல போராட்டங்களில் நூறுக்கணக்கான முஸ்லிம்கள் தங்கள் உயிர்களை இழந்திருக்கிறார்கள் என்பதும் உண்மை. ஆனால் இந்த செயல்பாடுகள் இஸ்லாத்தின் வளர்ச்சியையோ அல்லது நபிகளாரின் புகழையோ சிறிதும் குறைக்கவில்லை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இஸ்லாம் 2050 ஆண்டு உலகின் மிகப்பெரிய மதமாக மாறும் என்ற கருத்துக்கணிப்பை (PEW Research) நாம் பார்க்கிறோம். உலக வரலாற்றில் மிகச்சிறந்தவர்களை பதிவு செய்யப் புறப்பட்ட மைக்கேல் ஹார்ட் (Michel H Hart) தமது புத்தகத்தில் முஹம்மது (ஸல்) அவர்களைத்தான் முதலாவதாக தேர்வு செய்தார் என்பதையும் நாம் விளங்க வேண்டும்.
நபிகளாரை எதிரிகள் விமர்சனம் செய்வது சத்தியக் கொள்கையை அவர்கள் பிரச்சாரம் செய்த காரணத்தினால் தான் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். நபிகளாருக்கு எதிரான விஷமத்தனமான கருத்துக்கள் நம்மை இஸ்லாமிய மார்க்கத்தை மக்கள் மத்தியில் தெளிவாக எடுத்து வைக்கத் தூண்ட வேண்டும். போராட்டங்கள் மனித இயல்பாக இருந்தாலும் இஸ்லாமிய அழைப்புப் பணிதான் இதற்கு நிரந்தர தீர்வாக இருக்கும் எனபதையும் உணர்ந்து செயல்பட வேண்டும்.