காட்சி 1.
ஜூலை 12, 2022.
உத்தரப்பிரதேசின் லக்னோ நகரில் தொடங்கப்பட்ட யூசுப் அலியின் லுலு மால் நிறுவனத்தில் ஒரு சிலர் வந்து தொழுகை நடத்துகின்றனர். இந்த வீடியோ பதிவு பரவலாக சமூக ஊடகங்களிலும், பொது ஊடகங்களிலும் பரப்பப் படுகின்றது
காட்சி 2.
லுலு மாலில் தொழுகை நடந்ததை கண்டித்து இந்து மஹாசபா அமைப்பைச் சார்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். லுலு மாலில் பணிபுரியும் ஆண்கள் அனைவரும் முஸ்லிம்களாகவும் பெண்கள் அனைவரும் இந்துக்களாகவும் இருக்கின்றனர். அங்கு லவ் ஜிஹாத் நடைபெறுகின்றது. நாங்கள் லுலு மாலில் தொழுகை நடத்தப்பட்டதற்கு எதிராக ஹனுமான் சாலிஸாவை அங்கு சென்று படிப்போம் என்று இந்து மஹாசபா அமைப்பு அறிவிக்கின்றது.
உண்மை
லுலு மாலில் தொழுகை நடத்தியவர்களுக்கு தொழுகை குறித்த எந்த அடிப்படை அறிவும் இல்லை. அவர்கள் கிப்லாவை முன்னோக்கவில்லை.அவர்கள் அவசர அவசரமாக லுலு மாலில் வந்து 18 நொடிகளில் தொழுகை நடத்தி வீடியோ பதிவு செய்து விட்டு கிளம்பிச் சென்ற சிசி டிவி காட்சிகள் வெளியாகின்றது. இதை நேசனல் ஹெரால்டைப் போன்ற இணையப் பத்திரிக்கைகள் வெளியிட்டு தொழுகை நடத்தப்பட்டது வகுப்பு மோதலை உருவாக்கத்தான் என்றும் அங்கு தொழுதவர்கள் முஸ்லிம்களாக இருக்க வாய்ப்பு இல்லை என்ற செய்தியையும் வெளியிடுகின்றனர்.
இது தான் இன்றைய இந்தியா. காந்தியின் தேசம் இன்று கலவரக்காரர்களின் கருவறையாக மாறி இருக்கின்றது. அஹிம்சை இன்று அடக்குமுறைக்கு வழி விட்டு வாழாவிருக்கின்றது. இந்தியா முழுவதும் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு சதித்திட்டங்கள் தீட்டப்படுவதை நாம் பார்க்கிறோம். முஸ்லிம்களைப் போன்ற ஆடைகளை அணிந்து கோவில்களில் சென்று குழப்பங்களை ஏற்படுத்துவது, பெரும் ஊர்வலங்களை பல்வேறு காரணங்களை காட்டி ஏற்பாடு செய்து முஸ்லிம் பகுதிகளில் அந்த ஊர்வலத்தை நடத்தி, தாங்கள் ஏற்பாடு செய்த நபர்கள் மூலமாகவே கலவரங்களை ஏற்படுத்தும் திட்டம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப் படுகின்றது.
சமீபத்தில் நுபுர் ஷர்மா என்ற பாஜக செய்தி தொடர்பாளர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவு படுத்தி பேசியதை ஆதரித்து சமூக ஊடகத்தில் பதிவிட்ட இராஜஸ்தான் மாநிலம், உதய்பூரைச் சார்ந்த கன்னையா லால் என்ற டெய்லர் ஜூன் மாதம் 25ஆம் தேதி கொடூரமாகக் கொலை செய்யப்படுகின்றார். இந்த கொலையை செய்தவனென்று கைது செய்யப் பட்ட ரியாஸ் அக்தரி என்ற நபர் பாஜகவின் சிறுபான்மைப் பிரிவைச் சார்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. நபி (ஸல்) அவரகளை இழிவு படுத்தி பேசிய நுபுர் ஷர்மாவிற்கெதிராக உலக நாடுகளிலும், இந்தியாவின் பொது சமூகத்திலும் பெரும் எதிர்ப்பு ஏற்பட்டது. ஆனால் இந்த கொலை அந்த எதிர்ப்பை, மட்டுப்படுத்தியது மட்டுமன்றி முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் என்ற எண்ணத்தை பலப்படுத்தும் விதமாக வலது சாரி சங்க பரிவார் சக்திகளுக்கு உதவியாக அமைந்தது. இதைத் தொடர்ந்து நுபுர் ஷர்மாவின் வெறுப்பு நிறைந்த உரையை வெளிக்கொணர்ந்த முஹம்மது சுபைர் தில்லி காவல்துறையால் கைது செய்யப்படுகின்றார். பொய்யாகச் செய்திகளை பரப்புவதை ஆய்வு செய்து உண்மையை கண்டறியும் ஆல்ட் நியூஸ் என்ற இணைய வழி ஊடகம் வாயிலாக இந்தியாவின் ஊடகத்துறையின் பிரபலமாக உருவெடுத்த முஹம்மது சுபைர் தில்லியில் உத்தரப்பிரதேசிலும் பல்வேறு பகுதிகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இந்தியா முழுவதும் அழைத்துச்செல்லப்பட்டு அலைக்கழிக்கப்பட்டார். நோபல் பரிசுக்காக இந்த வருடம் பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் நபர்களில் இவரும் ஒருவர் என்பது இங்கு குறிப்பிட வேண்டிய விஷயம். இந்த கட்டுரை அச்சேறும் போது அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருக்கின்றது. பிரபலங்களின் நிலை இதுவென்றால் மற்ற சாதாரண மக்களின் நிலை என்னவென்று சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
கர்னாடகாவின் குடகு பகுதியைச் சார்ந்த தேவையா என்ற ஒரு சங்க பரிவாரைச் சார்ந்தவன், முஸ்லிம் பெயரில் ஒரு ட்விட்டர் கணக்கைத் தொடங்கி குடகு பகுதியில் அதிகமாக மதிக்கப்படும் காவேரி தாயைப் ( கடவுள்) பற்றியும் கோடவா இனப்பெண்களைப் பற்றியும் தவறாக பதிவிடுகிறான். இது பெரும் விவாதத்தையும் வகுப்புக் கலவரத்தையும் அந்த பகுதியில் ஏற்படுத்துகின்றது. பின்னர் இவன் ஒரு இந்து என்று கண்டறியப்பட்ட காரணத்தினால் பெரும் கலவரம் தவிர்க்கப்படுகின்றது.
இதை சிறிய அளவில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் சம்பவமாக மட்டும் எடுத்துக் கொள்ள இயலாது. சமீபத்தில் காஷ்மீரில் கைது செய்யப்பட்டிருக்கும் தாலிப் உசேன் என்ற லஷ்கர் பயங்கரவாதி காஷ்மீரின் பாஜக ஐடி விங் பொறுப்பாளராக இருந்தவர் என்பது சதித்திட்டம் எவ்வளவு ஆழத்தில் பயணிக்கிறது என்பதை நமக்கு உணர்த்துகின்றது. காஷ்மீர் காவல்துறையின் முக்கியப் பொறுப்பில் இருந்த தேவிந்தர் சிங் ஒரு சில தீவிரவாதிகளுடன் கடந்த வருடம் கைது செய்யப்பட்ட நிகழ்வு ஒரு அச்சம் கலர்ந்த சிலிர்ப்பை நமக்குள் ஏற்படுத்துகின்றது. புல்வாமா தீவிரவாதத் தாக்குதலில் இந்த காவல்துறை அதிகாரிக்கு இருக்கும் தொடர்பு விசாரணை செய்யப்பட வேண்டுமென்ற கோரிக்கையை மீறி இவர் மீதான விசாரணைகள் ரத்து செய்யப்பட்டு இலகுவாக இவர் விடுவிக்கப்பட்டார். புல்வாமா தாக்குதல் தான் பாஜக அரசை மீண்டும் ஆட்சிப்பொறுப்பிற்கு கொண்டு வர காரணமாக அமைந்த மிக முக்கிய நிகழ்வு என்பதையும் நாம் இங்கே மறக்க இயலாது.
சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக தீட்டப்படுகின்ற பல்வேறு சதித்திட்டங்களின் பல்வேறு உதாரணங்களை நாம் பார்த்தோம். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுகள் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இயலாத நிலை ஏற்படும் போது எதிர்ப்பை சந்திக்கின்றது. மக்களின் எதிர்ப்பு பெரும் நெருக்கடியாக மாறாமல் இருக்க இந்த அரசுகள் மக்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சிகளை மேற்கொள்கின்றன. பொருளாதார வீழ்ச்சியை, விலவாசி உயர்வை, வேலை இல்லா திண்டாட்டத்தை சந்தித்து வரும் இந்திய அரசு மக்களின் கவனத்தை திசை திருப்ப இது போன்ற நிகழ்வுகளை ஏற்படுத்துவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இந்தியாவை 800 ஆண்டுகாலம் ஆட்சி செய்த முஸ்லிம்களை ஒப்பிடும் போது பெரும்பான்மை மக்களுக்கு ஏற்படும் தாழ்வு மனப்பான்மை இங்கு பயன்படுத்தப் படுகின்றது. 15 சதவீதம் மக்களால் 80 சதவீதம் பேருக்கு பேராபத்து என்ற ஃபோபியா உருவாக்கப்படுகின்றது.
மறுபுறம் முஸ்லிம் சமூகத்தை கருவறுப்பதை தங்கள் இலட்சியமாக கொண்டு பயணிக்கக் கூடிய சங்க பரிவார் அமைப்புகள் தங்கள் இலட்சியமான இந்து ராஷ்ட்ராவை உருவாக்கும் முயற்சியில் பாகமாக இது போன்ற நிகழ்வுகளை பயன் படுத்துகின்றனர். காந்தியை கொலை செய்த சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி நாதுராம் கோட்சே தமது கைகளில் இஸ்மாயில் என்று பச்சை குத்தி இருந்ததாக வரலாற்றின் ஏடுகளில் நம்மால் பார்க்க முடிகின்றது.இந்த நிகழ்வுகளின் தொடர்ச்சி தான் தற்போதைய நிகழ்வுகள் என்பதை நாம் விளங்க வேண்டும்.
இந்தியா சுதந்திரமடைந்ததற்குப் பின்னர் சந்தித்த சவால்களின் மிகப்பெரும் சவாலை தற்போது சந்தித்து வருகின்றது. அரசியல் இலாபத்தை கணக்கில் கொண்டு இந்த நாட்டை பெரும் குழப்பத்தை நோக்கி ஆட்சியாளர்கள் வழிநடத்தும் போது நடுநிலையாக சிந்திப்பவர்கள் அனைவரும் ஒன்றிணைய கடமைப்பட்டிருக்கிறோம். தொடராக இழைக்கப்படும் அநீதிகள் அனைத்தும் முஸ்லிம் சமூகம் வரம்பு மீற வேண்டும் என்ற இலட்சியத்தோடு தான் நடத்தப்படுகின்றன என்பதை உணர்ந்து உணர்ச்சிவயப்படாமல் பொறுமையோடு இந்த சவாலை சந்திக்க நாம் முன்வர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களை ஒருங்கிணைத்து அரசியல் புரட்சியையும் ஆட்சி மாற்றத்தையும் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மிக முக்கியமாக ஏற்ற தாழ்வுகள் இல்லாத, பாரபட்சமற்ற ஒரு நாடாக நமது நாட்டை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதைவிட பேராபத்துகளை சந்தித்த முன் சென்ற சமூகங்களின் வரலாறு நமது ஈமானை புதுப்பிக்கட்டும். உறுதியான பாதங்களுடன் எல்லா எதிர்ப்புகளையும் சந்திக்கும் ஆற்றலை அல்லாஹ் வழங்குவானாக!